புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:14 IST)

இந்தியா - சீனா எல்லை மோதல்: பிரிக்ஸ் மாநாட்டில் சந்திக்கும் நரேந்திர மோதி - ஷி ஜின்பிங்

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை மோதல் நடந்த பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முதன் முதலாக சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பு நேரில் நிகழாது. ஆனால் இணைய வழியாக காணொலிக் காட்சி மூலம் நிகழும்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடக்க உள்ளது என்று தற்போது அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடந்த இந்த கூட்டத்தில் நரேந்திர மோதி மற்றும் ஷி ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த முறை இணையம் வழியே கூட்டம் நடைபெறுவதால் இந்த ஆண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியை கொண்டுள்ளன.

இந்த நாடுகளில் மட்டும் சுமார் 360 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த ஐந்து நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பதால் இந்த அமைப்பு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான பன்முக ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில், உலகளாவிய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவங்கள் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் இறந்தார்களா என்பது குறித்து தகவல் எதையும் சீனா வெளியிடவில்லை.

எனினும் சீன ராணுவ தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்பட்டது என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வந்தாலும், ராணுவ மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.