யாசிதி குழந்தை கொலை தொடர்பாக ஜெர்மன் ஐ.எஸ். பெண்ணுக்கு சிறை
அடிமையாக வாங்கிய யாசிதி இனக் குழந்தையை கொலை செய்ததாக இஸ்லாம் மதத்துக்கு மாறி இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) இயக்கத்தில் சேர்ந்த ஜெர்மனி பெண்ணுக்கு மியூனிக் நகரில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெனிபர் வெனிஷ் என்ற அந்தப் பெண்ணின் செயல் போர்க்குற்றத்துக்கு நிகரானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜெனிபர் வெனிஷ் ஒரு போர்க்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது, அவரது கணவர் ஐந்து வயது குழந்தையை சங்கிலியால் கட்டி வெயிலில் தாகத்தால் தவிக்க விட்டுக் சாகடித்தபோது அதற்கு உடந்தையாக ஜெனிபர் இருந்திருக்கிறார்.
அவரது கணவர் மீதான வழக்கு பிராங்பர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு இராக்கின் பல்லூஜா நகரில் அந்தச் சிறுமி இறந்தார்.
தன் மீதான குற்றச்சாட்டை வெனிஷ் மறுத்தார். குழந்தையின் தாய் நோரா ஒரு நம்பத்தகாத சாட்சி என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர், மேலும் சிறுமி உண்மையில் இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
யாசிதி இனத்துக்கு எதிராக ஐஎஸ் இயக்கத்தினர் புரிந்த குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
2014 இல் ஐஎஸ் பயங்கரவாதிகள் வடக்கு இராக்கில் உள்ள யாசிசி மக்களின் பகுதிக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்து வைத்தனர்.