1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:29 IST)

உங்கள் காதலர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவது?

மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார், ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப். (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தவர்).
 
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுகின்றன. அந்த உறவில் ஷ்ரத்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவரின் காதலர் ஷ்ரத்தாவை உடல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அந்த உறவில் இருந்து அவர் ஏன் வெளியேறவில்லை? அதை அவர் உணரவில்லையா என்பன உள்ளிட்ட கேள்விகளை பலரும் எழுப்புகின்றனர்.
 
சில சமயங்களில் இருவருக்கும் இடையேயான உறவு முறியும் நிலையில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அஃப்தாப் உடன் தான் பாதுகாப்பாக உணரவில்லை என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார் ஷ்ரத்தா. ஆனாலும், ஷ்ரத்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலரின் மனதை தொந்தரவு செய்கிறது.
 
‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவில் இருந்தும் ஏன் அதிலிருந்து ஷ்ரத்தா வெளியேறவில்லை?மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவு என்றால் என்ன? அதனை எப்படி அறிந்துகொள்வது? அதிலிருந்து பாதுகாப்பாக எப்படி வெளியேறுவது? என்பதை இக்கட்டுரையில் அலசியுள்ளோம்.
 
‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ என்றால் என்ன? 
“எங்கு இருக்கிறாய்? ஆன்லைனில் இருந்தும் ஏன் என் மெசேஜுக்கு நீண்ட நேரமாக பதில் அனுப்பவில்லை? உன்னுடைய ஜிபிஎஸ் இருப்பிடத்தை அனுப்பு, வீடியோ கால் செய்து நீ எங்கு இருக்கிறாய்? என காட்டு”.
 
இந்த கேள்விகள் எதனை உணர்த்துகின்றன? உங்கள் காதலியோ அல்லது காதலனோ உங்களை அதிகம் காதலிப்பதை உணர்த்துகிறது என பலரும் இவற்றை நியாயப்படுத்தலாம்.
 
ஆனால், இந்த கேள்விகளை எழுப்பும் நபர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறாரா, உங்களை கட்டுப்படுத்த நினைக்கிறாரா என்பதை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும் இது எப்போதாவது நடக்கிறதா அல்லது அடிக்கடி தொடர்கிறதா என்பதை பார்ப்பதும் அவசியம்.
 
ஒருவரை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது, எதிர்மறையாக அவர் மீது தாக்கம் செலுத்துவது ஆகியவை ‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ என, ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வரையறுக்கிறது.
 
டாக்சிக்’ உறவில் இருக்கிறோம் என்பதை எப்படி கண்டறிவது?
இங்கிலாந்தில் உள்ள பெண்கள் ஒத்துழைப்பு ஆணையத்தின் இணை தலைவர் ஆடினா கிளேர் இத்தகைய உறவை கண்டுபிடிப்பது குறித்த சில நடத்தைகளை விளக்குகிறார்.
 
மன ரீதியாக ஒருவரை துன்புறுத்துவதும் குடும்ப வன்முறையே என்கிறார் அவர். எனவே அத்தகைய உறவிலிருந்து உடனடியாக வெளியேறுவது அவசியமானது. அத்தகைய நபரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்வது முக்கியம்.
 
என்னென்ன நடத்தைகள்?
அதீத அன்பின் மூலம் தங்களுக்கு என்ன தேவையோ அதனை செய்ய வைத்தல். இது குறிப்பிட்ட உறவின் ஆரம்பத்தில் செய்யப்படும் ஒன்றாகும்.
அதீத பொறாமை
துன்புறுத்துதல்
முடிக்கப்படாத வேலைகளுக்கு மற்றொருவரை பொறுப்பாக்குதல்
உங்களின் வெற்றியை சிறுமைப்படுத்துதல்
நீங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக சித்தரித்தல்
உங்களின் நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை கூறினாலோ, உங்களின் நண்பர்கள், உறவினர்களையோ காண அனுமதிக்கவில்லை என்றாலோ, நீங்கள் ‘டாக்சிக்’ உறவில் இருப்பதாக நினைவில் கொள்ளுங்கள் என ஆடினா கூறுகிறார்.நீங்கள் அவமரியாதை செய்யப்படுகிறீர்களா?
ஹார்வர்டு ஹெல்த் இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் கீழ்க்கண்ட நடத்தைகள் இருந்தால் அது ‘டாக்சிக்’ உறவு என வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
உரையாடலுக்குப் பின் சோர்வு அல்லது மன அழுத்தத்தை உணர்தல்.
குறிப்பிட்ட உறவு குறித்து தொடர்ச்சியாக எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருத்தல்.
குறிப்பிட்ட உறவில் இருவரும் சமமாக இல்லாமல் இருப்பதை போன்று உணர்வது - அதாவது ஒருவர் தன் விருப்பங்களை விடுத்து
பெரும்பான்மையான பொறுப்புகளை கவனிப்பது.
உங்களின் துணையை அவமரியாதை செய்வது, அவர்களின் கருத்தை மதிக்காமல் இருப்பது.
இத்தகைய நடத்தைகள் உங்கள் துணையிடமிருந்து உணர்ந்தால், அந்த உறவை நீங்கள் மறுயோசனை செய்ய வேண்டும்.
 
மனவலியை ஏற்படுத்தும் உறவிலிருந்து வெளியேறுவது ஏன் கடினமாக உள்ளது?
அதற்கான காரணங்கள் சிலவற்றை மனநல ஆலோசகர் மருத்துவர் தேஜஸ்வினி குல்கர்னி விளக்குகிறார்.
 
“இத்தகைய உறவுகளில் எப்போதுமே மோசமான நடத்தையோ, துன்புறுத்தலோ இருக்காது. அதற்கிடையில் சில சமயங்களில் காதல், ஊக்கம், உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களும் இருக்கும்” என்கிறார் அவர். மாறிமாறிவரும் இத்தகை உணர்வு சுழற்சிகளில் பலரும் சிக்கிக்கொள்வதாக கூறும் அவர், தன்னுடைய காதலனோ/காதலியோ மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த உறவில் பலரும் தொடர்வதாக குறிப்பிடுகிறார்.
 
“சுயமரியாதையை குறைவாக கொண்டிருக்கும் நபர் ஒருவர், தான் இத்தகைய மோசமான நடத்தைகளுக்கு தகுதியான நபர் அல்ல என்பதை உடனடியாக உணர்வதில்லை. மாறாக, இத்தகைய நடத்தைகளுக்கு தாம் தகுதியானவர் என்றே நினைக்கின்றனர்” என்கிறார் அவர்.
 
தனிமையில் வாழ்வதில் இருக்கக்கூடிய அச்சத்தில் சிலர் அத்தகைய உறவில் தொடர்வதாக கூறுகிறார் தேஜஸ்வினி.இத்தகைய உறவிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டும்?
“யாரும் ஒரே இரவில் மாற மாட்டார்கள் என்ற யதார்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு மனவலியை ஏற்படுத்தும் காதலனோ / காதலியோ மாறமாட்டார்கள் என்பதையும் அவர்களுக்காக நீங்கள்தான் மாற வேண்டியிருக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
இத்தகைய உறவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களின் நெருங்கிய நண்பர் அல்லது உறவினரிடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். அப்படி யாரும் இல்லையென்றால், பல அமைப்புகள் வழங்கியிருக்கும் உதவி எண்களை அழைக்கலாம்.
 
இந்த உறவிலிருந்து வெளியேற வேண்டுமா என்பது குறித்து முடிவெடுப்பது கடினமாக இருக்கிறதென்றால் மனநல ஆலோசகரை அணுகலாம்,” என்கிறார் தேஜஸ்வினி குல்கர்னி.
 
சரியான நேரத்தில் உதவியை நாடுங்கள் - முக்கியமான உதவி எண்கள்
உங்களின் துணை துன்புறுத்தல் செய்கிறார் என்றால் உடனடியாக காவல் துறை அல்லது மகளிர் ஆணையத்தின் உதவியை நாட வேண்டும்.
 
ஒரு பெண் இத்தகைய பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்றால், நாடு முழுவதும் செயல்படக்கூடிய 1091 என்கிற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
 
தங்கள் கணவரிடமிருந்தோ அல்லது லிவ் - இன் பார்ட்னரிடமிருந்தோ வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் 181 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.
 
நாடு முழுவதும் செயல்படக்கூடிய 7827170170 என்ற எண்ணை தேசிய மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது.