வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (19:29 IST)

மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலை: ''எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்''

எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

கண்மணி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த கனகராஜின் அண்ணன் வினோத் என்பவர், கனகராஜ், கண்மணி இருவரையும் ரங்கராஜன் ஓடை பகுதியில் அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று அரிவாளால் வெட்டி உள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீரங்கராஜன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் தான் காதலித்த 16 வயதாகும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்னை திருமணம் செய்து கொள்ள வெண்டும் என்ற எண்ணத்தில், செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறி கண்மணியை சந்திக்க சென்றுள்ளார்.கொல்லப்பட்ட கனகராஜின் சகோதரர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

அதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்துவிட கண்மணி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கண்மணியின் தாயார் அமுதாவிடம் பேசியது பிபிசி தமிழ்.

"என் மகள் கனகராஜை காதலிப்பது எங்களுக்கு முன்னரே தெரிய வந்தது. நாங்கள் அருந்ததியர்கள், அவர்கள் வேறு ஒரு இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள். எனவே, சாதி பிரச்சனை வரும் என்று தெரிந்துதான் அவளை கண்டித்து வைத்திருந்தோம். சில நாட்களுக்கு முன்பு இப்பொழுது கொலை செய்த வினோத், மற்றும் அவருடன் சில பேர் எங்களை உங்கள் பெண்,எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று மிரட்டினார்கள். எனவே, நாங்கள் என் மகளை அவளது பாட்டி வீட்டில் கொண்டு போய் வைத்து இருந்தோம்."

"அங்கிருந்து வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு சென்று விட்டார். இது தெரிந்து நாங்கள் அவர்களை தேடி வந்த பொழுது, அந்த சாதியை சேர்ந்த ஒரு சிலர் நடு இரவில் எங்கள் வீட்டிற்கு வந்து உன் மகள் மட்டும் கனகராஜோடு போய் இருந்தால் அவ்வளவுதான் என்று, எங்கள் சாதியின் பெயரை சொல்லி மோசமான வார்த்தைகளால் மிரட்டினார்கள். எங்கள் பெண்ணுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று பதற்றத்தோடு தேடிய பொழுதுதான் நேற்று இந்த செய்தி வந்தது," என்கிறார்.

மேலும், என் மகள் உயிர் பிழைப்பது மிகவும் கஷ்டம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலும் எங்களுக்கு சாதி ரீதியான மிரட்டல்கள் வருகின்றது என்ற அமுதா மிகவும் தளர்ந்து போய் இருப்பதால் அவரால் தொடர்ந்து பேச இயலவில்லை.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்த வினோத்குமார் சரணடைந்து உள்ளதாகவும் காவல் துறை தெரிவிக்கின்றது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கண்மணி தலை மற்றும் கண்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தரவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 



பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தினர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிபாளையம் ரோடு பகுதியில் இருக்கும் துப்புறவு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

குடும்ப சூழலால் படிக்க வைக்க இயலவில்லை என்று கண்மணியின் பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அரசு மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினை சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட கனகராஜின் குடும்பத்தினர் காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 185 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் அவற்றில் மூன்று கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாகவும் கூறும் செயல்பாட்டாளர் 'எவிடென்ட்ஸ்' கதிர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதியக் குற்றங்கள் அதிகம் நடப்பதால் அதை ஆணவக் குற்றங்கள் அதிகம் நடக்கும் மண்டலமாக அறிவித்து, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவால் சாதிய ஒடுக்குமுறைகள் சார்ந்த குற்றங்களை கண்காணித்து, அவை தொடர்பான விழிப்புணர்வு, சட்ட நடவடிக்கைகள் ஆகியன கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார்.