1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (00:11 IST)

மேதகு': "திருமாவளவனை தாக்க இதுவே காரணம்" - இயக்குநர் கிட்டு விளக்கம்

சமீபத்தில் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமாக 'மேதகு' வெளியாகி இருந்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குநர் கிட்டுவை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. என்ன சர்ச்சை அதற்கு அவரது விளக்கம் என்ன?
 
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வெளியாகியிருக்கும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
பிரபாகரன் வாழ்க்கையை சித்தரித்ததில் சில குறைகள் இருந்தாலும் உண்மை நெருக்கமாக அமைந்திருக்கிறது என பரவலான பாராட்டுகளையும் படக்குழு பெற்றது.
 
இப்போது என்ன சர்ச்சை?
 
'மேதகு' திரைப்படத்தின் இயக்குநர் கிட்டு, முன்பு 'நாம் தமிழர் கட்சி'யில் இருந்தவர். இப்போது கட்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டார்.
 
இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்த போது சமூகவலைதள பக்கங்களில் திராவிட இயக்கங்கள் குறித்தும், தனிமனித தாக்குதல், அவதூறு, நாகரிமற்ற வார்த்தைகள் உபயோகப்படுத்தி விமர்சனம் என கடந்த 2019-ல் அவர் பதிவிட்ட பல பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

'மேதகு' என்றொரு படம். பொதுவா நல்லா இருக்கிறதா சொல்றாங்க. கீழே உள்ளவை, அந்த படத்தின் இயக்குனர் தி.கிட்டு, ஃபேஸ்புக்கில் சமீப காலத்தில் எழுதிய பதிவுகள். ஒவ்வொன்றும் அருவருப்பான அவதூறு, வக்கிரமான வன்மம். pic.twitter.com/nR0cGj6geo
 
இந்த சர்ச்சைகளை தொடர்ந்து இயக்குநர் கிட்டு தனது முகநூல் பக்கத்தை தனிப்பட்ட முறையில் மாற்றியிருப்பதும் (Locked Account) விமர்சனம் ஆகியுள்ளது.
 
'எதிர்வினை கருத்துகள்'
 
பெரியார் குறித்தும், திராவிடம், பெண்கள் குறித்தும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களாக, அவதூறாக இருக்கும் இந்த பதிவுகளை பலரும் தற்போது சமூக வலைதளங்களில் கண்டித்து வருகின்றனர். இப்படி கருத்து சொல்லியிருக்கக்கூடியவர் எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதுதான் அதன் சாரமாக இருக்கிறது. இந்த சர்ச்சைகள் தொடர்பாக விளக்கம் பெற இயக்குநர் கிட்டுவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம், "கடந்த 2019-ல் தலைவர்கள் யாராவது தமிழ் தேசியத்தை எதிர்த்து கருத்து சொன்னாலோ, வன்மமாக பேசினாலோ அதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு சில கருத்துகளை பதிவிட்டிருந்தோம். ஆனால், அதை எல்லாம் எதற்கு இப்போது எடுத்து பேச வேண்டும் என தெரியவில்லை. 'மேதகு' படம் நல்ல வெற்றி பெற்று மக்களிடம் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் பேசியதற்கான எதிர்வினைதான் செய்தோம்".
 
திருமாவளவனை தாக்கியது ஏன்?
 
கிட்டுவின் முகநூல் பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவனை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக, 'அவர் திருமணம் ஆகாதவர் என்பதால்தான் கோயிலில் உள்ள சிலைகள் ஆபாசமாக தெரிகிறது' என பொருள்படும் விதத்தில் பதிவிட்டிருந்தார். அது குறித்து கேட்டபோது, 'திருமாவளவன் ஐயா ஒருமுறை மேடையில் பேசும்போது, 'கோயிலில் இருக்கக்கூடிய சிலைகள் எல்லாம் ஆபாச பொம்மைகள்' என சொல்லியிருந்தார். ஒவ்வொரு கலைக்கு பின்னும் ஒரு நுட்பம் இருக்கும். அப்படி இருக்கும் போது ஏன் அதை அப்படி சொல்ல வேண்டும்? அதற்கான எதிர்வினையாகதான் செய்தோம். மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் இல்லை".
 
'கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்'
 
"கட்சியில் இருந்து விலகிவிட்ட நிலையில், இப்பொழுது மீண்டும் இந்த பதிவுகள் குறித்தோ, விமர்சனம் செய்பவர்களுடன் சண்டை செய்யவோ விரும்பவில்லை. ஏனெனில், தலைவர் படத்தை கொண்டு போய் சேர்க்க பல அரசியல் கட்சிகளும் உதவின. திராவிட இயக்கங்கள், அதில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் இந்த படம் நல்லபடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவி செய்தார்கள். அப்படி இருக்கும் போது என்னுடைய பழைய பதிவுகளை இப்போது கொண்டு வருவது என்பது தேவையில்லாதது. என்னுடைய திராவிடம்-தமிழ்த்தேசிய கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். ஆனால், இந்த சர்ச்சை தலைவருக்கு இழுக்காக இருக்கக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
 
திராவிடம் என்பது ஒற்றைக்குடைக்குள் வந்துவிடும். ஆனால், தமிழ்த்தேசியம் அப்படி இல்லை. திராவிடத்தை ஒட்டிய தமிழ்த்தேசியம், தூய தமிழ்த்தேசியம் என பல பிளவுகள் உண்டு. இதில் நாங்கள் ஒரு தமிழ்த்தேசியத்தின் பக்கம் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய அடிப்படையான தமிழ்த்தேசியம் என்ற கொள்கையில் இருந்து மாற மாட்டேன். ஆனால், இந்த மாதிரியான கருத்துகள் இனி பதிவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். முந்தைய பதிவுகள் வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்றார்.