1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (17:08 IST)

தமிழகத்தில் தொடரும் அதிகாரிகள் தற்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தில் அரசியல் நெருக்கடி, அதிகாரிகள் நெருக்கடியின் காரணமாக அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

 
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்திருக்கும் அறிக்கையில், திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றிவந்த முத்துகிருஷ்ணன் என்பவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் தனது மரணத்திற்குக் காரணமாக உயரதிகாரி ஒருவரது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
அதேபோல கோவை மாட்டத்திலும் ஒருவர் ஆளுங்கட்சிப் பிரமுகர் கொடுத்த தொந்தரவின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
 
2016ல் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், அதிமுக -வினர் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதே தற்கொலைகளை தனது அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போதைய ஆட்சியில் அமைச்சர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையிலுள்ள அரசு ஊழியர்களை விதிகளை மீறி செயல்படும்படி மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
 
ஒரு காலத்தில் வரமாக இருந்த அரசு வேலை சாபமாக மாறி வருகிறது என்றும் தமிழகத்தில் அதிமுக அரசு தற்கொலைகளின் அரசாக மாறி வருகிறது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.