1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (00:08 IST)

அபாய கட்டத்தை நோக்கி உயரும் புவி வெப்பநிலை - தாங்குமா தமிழ்நாடு?

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
 
இப்போதிருந்து 2017ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் இளங்கோ எச்சரிக்கிறார்.
 
இதனால், தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
புவியின் சராசரி வெப்பநிலை அளவை, தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயரவிடாமல் தடுப்பதற்காக பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன.
 
ஆனாலும், தற்போது அந்த அளவை எட்டும் நிலையில் பூமி உள்ளது. இது நிகழ்ந்தால், 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்த புவி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையை பூமி அடையக்கூடும்.
 
மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள், எல் நினோ போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக இதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 
அடுத்த ஒருசில ஆண்டுகளில் வெப்பநிலை வரம்பை பூமி கடக்கக்கூடும் என்ற எச்சரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையிலும்கூட, வெப்பநிலை அதிகரிப்பு என்பது துரிதமாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
 
பத்து அல்லது 20 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் 1.5°C என்ற அளவைக் கடப்பது என்பது வெப்பமயமாதல் தொடர்பான கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நீண்ட வெப்ப அலைகள், அதிதீவிர புயல்கள், காட்டுத்தீ ஆகிய பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.
 
அதேநேரத்தில், அடுத்த சில ஆண்டுகளில் ஒருமுறை இந்த வெப்பநிலை வரம்பைத் தாண்டுவது என்பது பாரீஸ் வரம்பை மீறுவதாக அர்த்தப்படாது. உமிழ்வை கடுமையாகக் குறைப்பதன் மூலம் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
2020ஆம் ஆண்டு முதல் உலக வானிலை அமைப்பு, பூமி 1.5°C என்ற வரம்பை கடப்பதற்கான வாய்ப்புகள் எந்த ஆண்டில் அதிகமாக உள்ளது என்று மதிப்பிட்டு வருகிறது.
 
ஆனால், இதற்கான வாய்ப்பு 20 சதவீதம் மட்டுமே இருப்பதாக அப்போது அவர்கள் கணித்திருந்தனர். கடந்த ஆண்டு அந்த விகிதாச்சாரம் 50 சதவீதமாக அதிகரித்தது. தற்போது இது 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.
?
இது உலகின் வெப்பநிலையின் நேரடி அளவீடு அல்ல. ஆனால் நீண்ட கால உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடும்போது பூமி எந்தளவு அதிகமாகவோ, குறைவாகவோ வெப்பமடைந்துள்ளது அல்லது குளிர்ந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது.
 
1850-1900 வரையிலான சராசரி புவி வெப்பநிலை தொடர்பான தரவுகளைக் கொண்டு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றைச் சார்ந்திருப்பதற்கு முன்பாக பூமி எந்தளவு வெப்பமாக இருந்தது என்பதை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர்.
 
பூமியின் சரசாரி வெப்பநிலை 2°C-ஐ கடந்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். இந்நிலையில், 1.5°C-ஐ கடந்தாலே அது பூமிக்கு ஆபத்தாக அமையும் என்று 2018ஆம் ஆண்டு அவர்கள் திருத்தம் செய்தனர்.
 
கடந்த சில பத்து ஆண்டுகளாகவே பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக 2016ஆம் ஆண்டு புவி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய கணக்குகளுடன் ஒப்பிடும்போது 1.28°C அதிகமாகப் பதிவாகியிருந்தது.
 
2016ஆம் ஆண்டுதான் வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. இந்நிலையில், இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஓர் ஆண்டு இருப்பதற்கான வாய்ப்பு 93% உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
 
தற்போதைய காலத்துக்கும் 2027க்கும் இடைப்பட்ட காலத்தில் முதன்முறையாக 1.5°C என்ற உச்ச வரம்பை மீறுவதற்கு வலுவான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
 
"நாம் இப்போது வருடாந்திர சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸின் தற்காலிக மீறலை எட்டியுள்ளோம். மேலும் மனித வரலாற்றில் நாம் சராசரி வெப்பநிலைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இதுவே முதல்முறை," என்று வானிலை அலுவலகத்தின் நீண்ட தூர முன்னறிவிப்புகளின் தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கேஃப் கூறினார். உலகெங்கிலும் உள்ள வானிலை மற்றும் காலநிலை ஏஜென்சிகளின் தரவை இவர் தொகுத்துள்ளார்.
 
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிபிசியிடம் பேசுகையில், "தொழில் புரட்சி ஆரம்பத்த 1800 காலகட்டங்களுக்குப் பிறகு புதைப்படிமங்களை எரிப்பது அதிகரித்தது.
 
இதனால் ஏற்பட்ட உமிழ்வுகள் வளிமண்டலத்தில் அதிகளவில் சேரத் தொடங்கியதால் பூமி சூரிய வெப்பத்தைத் தக்க வைக்கத் தொடங்கியது. இதனால் புவியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.
 
தொழிற்புரட்சி தொடங்கியபோது புவியின் வெப்பம் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற சராசரியைவிட அதிகரிக்கும்போது அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று பாரீஸ் ஒப்பந்தம் கூறுகிறது.
 
இந்நிலையில்தான், 2027க்குள் எதோவோர் ஆண்டில் இந்த சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உச்ச வரம்பைத் தாண்ட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்," என்றார்.
 
அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியரான ல.இளங்கோ நம்மிடம் பேசுகையில், "எல் நினோவும் லா நினோவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி நிகழும். கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பதையே நாம் எல் நினோ என்கிறோம்.
 
எல் நினோவால் கடல் மட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பதோடு நிலத்திலும் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு போவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். மணல் பரப்பில் இருக்கும் நீர் வறண்டு போகும்.
 
எனவே, மழை பெய்தால், நீர்நிலைகள், மணல் பரப்பு போன்றவற்றில் ஏற்பட்ட பற்றாக்குறையைப் பூர்த்தி செய்த பின்னரே, நிலத்தினுள் செல்லும். இதனால், நிலத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு குறையக்கூடும்.
 
இதேபோல், கடலோரத்தில் இருக்கும் சென்னையில் ஆண்டுக்கு 1.5 முதல் 3 மில்லிமீட்டர் வரை கடல் மட்டம் உயர்கிறது. வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது, பனிப்பாறைகள் வேகமாக உருகி கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய ஆபத்து உள்ளது" என்றார்.
 
சுந்தர்ராஜன் பேசும்போது, "வெப்பநிலை குறையும் நிலையை லா நினோ என்றும் வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையை எல் நினோ என்றும் அழைக்கிறோம்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக லா நினோ நிலவிய நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இருந்து எல் நினோ மாற்றம் ஏற்படவுள்ளது. பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
 
வெப்பநிலை உயர்வை லா நினோ மறைத்து வைத்திருந்தது. உண்மையான வெப்பம் எல் நினோ வரும்போதுதான் நமக்குத் தெரியும்` என்றார்.
 
இதனால், தமிழகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "வெப்பநிலை அதிகரிக்கும்போது கடுமையான வெப்ப அலைகள் வீசும். அதேபோல், மழைப் பொழிவும் சராசரியைவிட அதிகமாக இருக்கும்.
 
மூன்று மாதங்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும். வறட்சி ஏற்படும், புதிய புதிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதார இழப்பும் ஏற்படலாம்," என்று குறிப்பிட்டார்.
 
கரிம உமிழ்வை 2030க்குள் 50 சதவீதம் அளவுக்கு குறைப்பதும், 2050க்குள் நிகர பூஜ்ய அளவுக்குக் குறைப்பதுமே இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.