1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:13 IST)

இந்தியா லாகூரை தாக்கப்போகும் செய்தி கிடைத்தும், பாகிஸ்தான் எதிர்வினை ஆற்றாதது ஏன்?

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரி மிகவும் குதூகலமான மன நிலையில் இருந்தார்.
 
சாஸ்திரி, "அயூப் நடைபயிற்சி செய்து கொண்டே டெல்லி வந்தடைந்து விடுவேன் என்று அறிவித்திருக்கிறார். அவர் பெரிய மனிதர், டெல்லி வரை நடந்து வரும் சிரமம் அவருக்கு எதற்கு? நாமே லாகூர் செல்வோமே என்று எனக்குத் தோன்றியது" என்றார்.
 
சாஸ்திரியின் நகைச்சுவை
அது சாஸ்திரி என்கிற தனிமனிதரின் குரலன்று. 1965 போருக்குப் பிறகான இந்தியத் தலைமையின் தன்னம்பிக்கையின் குரல். சாஸ்திரியின் குட்டை உருவமும் குரலும் தான் அயூப் கானால் வெகுவாகப் பரிகாசம் செய்யப்பட்டது. யாரையும் அவரவர் நடத்தையைப் பார்த்தன்றி உருவத்தைப் பார்த்தே எடை போடும் குணம் அயூப் கானுக்கு இருந்தது.
"அயூப், இந்தியா பலவீனமாக இருப்பதாக நினைக்கத் தொடங்கினார். ஒன்று இந்தியர்களுக்குப் போர்க் குணம் இல்லை என்ற கருத்து. மற்றொன்று, பலவீனமான அரசியல் தலைமை என்கிற கருத்து. அவர் டெல்லிக்கு வரும் திட்டமிருந்தது. ஆனால், நேருவின் மரணத்திற்குப் பிறகு, இப்போது நான் யாருடன் பேச்சு வார்த்தை நடத்துவது என்று கூறி, தனது பயணத்தை ரத்து செய்தார்." என்று நினைவு கூர்கிறார் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சங்கர் பாஜ்பாய்,
 
"நீங்கள் வர வேண்டாம், நான் வருகிறேன் என்றார் சாஸ்திரி. கெய்ரோ சென்றிருந்த சாஸ்திரி, திரும்பி வரும் போது, கராச்சியில் ஒரு நாள் தங்கினார். விமான நிலையத்தில் சாஸ்திரியை வழியனுப்ப பாகிஸ்தான் அதிபர் அயூப் வந்ததை நேரில் கண்ட சாட்சி நான். இவருடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று அவர் தனது சகாக்களிடம் சுட்டிக்காட்டியதை நான் கவனித்தேன்." என்றும் கூறுகிறார் சங்கர்.
 
போருக்குக் காரணம் புட்டோ
இது மட்டுமல்ல, காஷ்மீர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சர்வதேச எல்லையைத் தாண்டாது என அயூப் நினைத்தது மிகப் பெரிய தவறு.
 
"அந்த இடத்தில் அதீதமான தன்னம்பிக்கை உருவாகியிருந்தது. ஒன்று, அவரே ஒரு ஜெனரலாக இருந்தவர். நேருவின் மறைவுக்குப் பிறகு, யாரோ ஒரு புதிய பிரதமர் வந்திருக்கிறார், அவருக்கு அந்த அளவு செயல் திறன் இருக்காது என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அதனால் இந்தப் போரை நம்மால் (இந்தியாவால்) எதிர்கொள்ள முடியாது என்று அவர் எண்ணிவிட்டார், குறிப்பாக 1962 க்குப் பிறகு." என்கிறார் கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் ராகவன்.
 
"மற்றொரு பக்கம், அவருடைய முக்கிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்களில் ஒருவரான ஜுல்பிகர் அலி புட்டோ, அந்த நேரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால், காஷ்மீர் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக தீர்க்க முடியும் என்று ஆலோசனை கூறினார்." என்றும் ஸ்ரீநாத் ராகவன் குறிப்பிடுகிறார்.
 
"போருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் கேபினட் அமைச்சர் ஒருவர், அயூப்பிடம் ‘இந்த யோசனையின் சாதக பாதகங்களைப் பற்றி நீங்கள் உங்கள் சகாக்களுடன் ஆலோசிக்கவில்லையா?’ என்று கேட்டபோது, அயூப் மிக மனவேதனையுடன், எங்களது பலவீனமான தருணத்தை நினைவூட்டவேண்டாம் என கூறினார்" என்று தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரிகேடியர் ஏ.ஏ.கே.சவுத்ரி.
போர் முடிவுற்ற பிறகு, தான் பாகிஸ்தான் சென்றதாக பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நய்யர் பிபிசியிடம் கூறினார். அவர், "நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? நீங்கள் வெற்றி பெற முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா" என்று அயூப்பிடம் கேட்டதற்கு, "இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கவேண்டாம். புட்டோவைச் சந்திக்கும் போது, அவரிடம் இதைக் கேளுங்கள்" என பதிலளித்தார்," என நினைவுகூர்ந்தார் நய்யர்.
 
புட்டோவின் உரை
 
இதன் பிறகு நய்யர் புட்டோவையும் சந்தித்தார். "நான் புட்டோவைச் சந்தித்தபோது, '​இது புட்டோ தொடங்கிய போர் என்று எல்லோரும் சொல்கிறார்களே' என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "நான் அதைப் பொருட்படுத்தவில்லை. நாங்கள் உங்களை வெல்ல இது தான் ஒரே வாய்ப்பு என்று நினைத்தேன். நீங்கள் பல ஆயுதத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதால், பிறகு உங்களை வெல்வது கடினம் என்று கருதினேன்.
 
இரண்டாவதாக, நாங்கள் எங்கள் மக்களை அனுப்பும்போது, ​​காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு ஆதரவாக எழுவார்கள் என்றும் கருதினேன். என் எண்ணம் தவறாகிப் போனது" என விடையளித்ததாகக் கூறுகிறார் நய்யர்.
 
அயூப் கான் போரை நோக்கி இட்டுச் சென்ற பின், ஐ நா சபையில் போர் நிறுத்தத்தை ஏற்பது, புட்டோவுக்கு அவமானமான விஷயமாக இருந்திருக்கும். ஆனால் அவர் ஆற்றிய உரை, நடுநிலை நாடுகளுக்கு ஏமாற்றமளித்திருக்கும். ஆனால், பாகிஸ்தானில் மக்களின் வெறுப்புக்கு இது காரணமானது.
 
புறக்கணிக்கப்பட்ட பூடகமான செய்தி
அயூப் பற்றிய புத்தகத்தை எழுதிய அல்தாஃப் கௌஹர், "டெல்லியில் பாகிஸ்தான் தூதர் மியான் அர்ஷத் ஹுசைன், துருக்கி தூதரகம் மூலம் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திற்கு செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்ற ஒரு பூடகமான செய்தியை அனுப்பினார்.
 
தூதரகங்களிடமிருந்து வரும் ஒவ்வொரு மறைகுறியாக்கப்பட்ட செய்தியையும் அதிபரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால் இந்தச் செய்தி அயூபிற்குத் தெரிவிக்கப்படவில்லை.
 
வெளிவிவகாரச் செயலாளர் அஜிஸ் அகமது இந்தச் செய்தியை மறைத்ததற்குக் காரணம், அவரைப் பொருத்தவரையில், அர்ஷத் ஹுசைன் தேவையில்லாமல் பதற்றப்படக் கூடியவர் என்பதுதான்.
 
ஆயினும், செப்டம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இந்தியத் தாக்குதல் செய்தி அயூபுக்குத் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி, ​​இந்தியப் படைகள் லாகூரை நோக்கி முன்னேறுவதாக அயூப்பிடம் கூறினார்.
 
போரின்போது உண்ணாவிரதம்
 
மறுபுறம், இந்தப் போருக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியின் புகழ் கூடியது. குறிப்பாக நேருவின் மரணத்திலிருந்து நாடு இன்னும் மீள முயன்று கொண்டிருந்த நிலையில், அவர் இந்தியாவிலும் அவரது சொந்த கட்சியிலும் ஒரு செயல்திறன் மிக்கவராகவே பார்க்கப்பட்டார்.
 
மேற்கு கமாண்ட் பகுதியின் தளபதி ஜெனரல் ஹர்பக்ஷ் சிங், "போரின் மிகப்பெரிய முடிவு (லாகூரை நோக்கி செல்ல), மிகக் குறைந்த உயரமுள்ள மனிதரால் எடுக்கப்பட்டது. இந்தப் போர்க் காலத்தில், எதிர்க்கட்சிகளையும் நாட்டு மக்களையும் ஒருங்கிணைந்து செயல்படவைக்கும் முயற்சியில் சாஸ்திரி ஈடுபட்டிருந்தார்." என்று எழுதினார்.
லால் பஹதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி நினைவு கூர்கையில், "போர்க்காலத்தில், ​​அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தாவிட்டால், பி எல் 480 ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அனுப்பப்படும் கோதுமை நிறுத்தப்படும் என்று சாஸ்திரிக்கு மிரட்டல் விடுத்தார். அந்த நேரத்தில். நம் நாட்டில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யப்படவில்லை. சாஸ்திரி சுயமரியாதையுள்ளவர் என்பதால் இது அவரை மிகவும் பாதித்தது." என்று தெரிவித்தார்.
 
இதற்குப் பிறகுதான் சாஸ்திரி நாட்டு மக்களிடம், வாரத்துக்கு ஒரு நாள் உணவு உண்பதைத் தவிர்த்தால், அமெரிக்காவிலிருந்து வரும் கோதுமையின் தேவை இருக்காது என்று மக்களைக் கோரினார்.
 
"ஆனால் அதற்கு முன், அவர் என் அம்மா லலிதா சாஸ்திரியிடம் இன்று மாலை உணவு சமைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டார். தன் சொந்த குழந்தைகள் ஒரு வேளை உணவின்றி இருக்க முடியுமா என்று அவர் பார்க்க விரும்பினார். நாங்கள் ஒரு வேளை உணவின்றி இருந்ததைப் பார்த்துத் தான் மறுநாள் பொது மக்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்தார்" என்று நினைவுகூர்கிறார்.
 
தவறான ஆலோசனை
 
'கட்ச் டூ தாஷ்கண்ட்' புத்தகத்தை எழுதிய ஃபரூக் பாஜ்வா, "இந்திய அரசின் சில அங்கங்கள் மிகச் சிறப்பாகவும் சில, சுமாராகவும் செயல்பட்டு வந்தன. ஆனால், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் நல்ல முறையில் செயல்பட்டன.
 
இருந்த போதும், இவையிரண்டும் அசாதாரணமாகச் செயல்பட்டன என்று கூறுவதும் தவறாகும். இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பாக விமர்சிக்கப்பட்டது, ஏனென்றால் போரின்போது உலகின் மிகச் சில நாடுகள் மட்டுமே வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவளித்தன.
 
ராணுவ விமர்சகர்களும் இந்தியாவின் வியூகம் குறித்து விமர்சித்தார்கள். இந்தியா விரும்பியிருந்தால், கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கி பாகிஸ்தானை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் என்பது அவர்களது வாதம்.
 
ஆனால் சீனா இந்தப் போரில் தலையிடக்கூடும் என்ற அச்சம் இந்தியாவை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்திருக்கலாம். போரின் கடைசி கட்டத்தில் போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது, ​​போரைத் தொடர்வதில் இந்தியாவுக்கு ஏதேனும் நன்மை உள்ளதா என ராணுவத் தளபதி ஜெனரல் சவுத்ரியிடம் பிரதமர் சாஸ்திரி கேட்டார்.
 
போரை முடிவுக்கு கொண்டுவர அவர் அறிவுறுத்தியிருந்தார், இந்தியாவின் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக அவர் கூறினார். ஆனால் உண்மையில், இந்தியாவின் 14 சதவீத ஆயுதங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டிருந்தன.