வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (23:48 IST)

விமான பணிப்பெண்கள் அழகாக காட்டிக் கொள்ள அழுத்தம் தரப்படுகிறதா?

யுக்ரெய்னின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் பணிப்பெண்கள் வழக்கமான பணிப்பெண் ஆடைகளாக கருதப்படும் பென்சில் ஸ்கர்ட், பிளேஸர் மற்றும் ஹை ஹீல்ஸுக்கு பதிலாக சாதாரண ஆடைகள், பேன்ட்-சூட்டுகள் மற்றும் ஸ்னீக்கர்களில் தோற்றம் அளிக்கப்போகிறார்கள்.
 
இவர்களின் ஆடையின் நிறத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றாலும், இந்த புதிய ஆடை முன்பு போலவே ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என்றும் ஸ்கைஅப் நிறுவனம் கூறியிருக்கிறது.
 
இந்த விமான நிறுவனத்தின் பெண் ஊழியர்களில் ஒருவரான டாரியா சோலைமானயா, "கீஃபில் இருந்து சான்சிபார் வந்து திரும்பிச் செல்லும்போது, ​​நீங்கள் 12 மணி நேரம் குட்டை ஸ்கர்ட் அணிந்தபடியே இருக்க வேண்டும். மேலும் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால், ஹை ஹீல்ஸ் அணிவது மீண்டும் இயல்பாக நடக்க இயலாத நிலையை ஏற்படுத்தும். இது நான்கு மணிநேர பாதுகாப்பு சோதனை மற்றும் விமானம் தூய்மைப்படுத்தும் நேரத்தில் ஏற்படும் காத்திருப்பையும் உள்ளடக்கியது," என்றார்.
 
ஸ்கைஅப் ஏர்லைன்ஸ் ஐரோப்பாவின் குறைந்த பட்ஜெட் விமானங்களில் ஒன்று என்றாலும், யுக்ரெய்னின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று. அடுத்த மாதத்திலிருந்து, ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் பணிப்பெண்களின் பழைய உடை மாறப்போகிறது.
 
விளம்பரம்
 
விமான பணிப் பெண் பணி மறுக்கப்பட்டதால் கருணைக் கொலைக்குக் கோரும் திருநங்கை
ஏர் இந்தியா விமான பணிப்பெண் விமானத்தில் இருந்து கீழே விழுந்து காயம்
உண்மையில், ஸ்கைஅப் நிறுவனம் தமது பணிப்பெண்களிடையே இந்த உடை மாற்றம் யோசனை தொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியபோது, பல ​​பெண் ஊழியர்கள் உயர் குதிகால் காலணிகள், இறுக்கமான பிளவுசுகள் மற்றும் பென்சில் ஸ்கர்ட்டுகளை அணிந்து விமானத்தில் பயணம் செய்வது பற்றிய வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
 
குதிகால் காலணிகள் காரணமாக தங்களுடைய கால் விரல்கள் மற்றும் நகங்கள் மோசமாக பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் புகார் செய்தனர்.
 
யுக்ரெய்னின் பணிப்பெண்களின் ஆடை விரைவில் மாறப்போகிறது.
 
பெண்களின் ஆடை தோற்றம் ஏன் ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும் என்ற கேள்வியை இந்த நிறுவனத்தின் முயற்சி தோற்றுவித்திருக்கிறது.
 
டெல்லியைச் சேர்ந்த சுல்தானா அப்துல்லா, தனது 20 வயதில் ஏர் இந்தியாவில் வேலை செய்யத் தொடங்கினார். அவருக்கு கேபின் க்ரூவில் 37 வருட அனுபவம் உள்ளது.
 
விமானத்தில் பயணம் செய்வது ஒரு காலத்தில் கவர்ச்சியைத் தவிர வேறில்லை என்று அவர் கூறுகிறார்.
 
ஆனால் இப்போது அந்தப்போக்கு மாறி விட்டது. விமானப்போக்குவரத்துத்துறை இப்போது பயணத்தின் அவசிய வழியாகப் பார்க்கப்படுகிறது, எனவே இந்த சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்புடைய ஆடைகளை அணியும் தேவை உள்ளது.
 
"ஆண்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற குட்டை ஆடைகளையும் ஹை ஹீல்ஸ் காலனிகளையும் பணிப்பெண்கள் ஏன் அணிய வேண்டும்?" என்று கேட்கிறார் சுல்தானா.
 
மேலும் அவர், "ஒரு பெண் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அதேசமயம், தொப்பையும் தொந்தியுமாக ஓர் ஆணால் இங்கே வேலை செய்ய முடிகிறது என்பதே உண்மை" என்றார்.
 
"விமானப்பணிப்பெண் ஆக தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், அந்த காலத்தில் விமான பணிப்பெண்கள் மிகவும் அழகாக புடவை கட்டிக்கொண்டு தட்டையான செருப்புகளை அணிந்திருந்தார்கள். பனாரசி, ஜங்கிள் பிரிண்ட், செயற்கை மற்றும் பார்டர் புடவைகள் அவர்களின் சீருடையாக இறுந்தன. ஆனால் நீண்ட பயணங்களின்போது பணிப்பெண்கள் புடவைகளை அணிவது கடினமாக இருந்தது," என்றார் சுல்தானா.
 
பிபிசியுடனான ஒரு உரையாடலின்போது, "ஆரம்பத்தில் புடவை அணிந்து நடப்பதில் சிக்கல் இருந்தது, ஆனால் பிறகு அதற்கு நாங்கள் பழகிவிட்டோம். விமான பணிப்பெண் வேலைக்காக அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து ஆறே முக்கால் கஜ புடவை அணிய வேண்டும். கழிவறைக்கு செல்வது கடினமாக இருக்கும். செருப்புகளாலும் புடவையாலும் உங்கள் நிலை மோசமாகியிருக்கும். இருப்பினும், பின்னர் வந்த ஆண்டுகளில் சுடிதார் அணிய அனுமதிக்கப்பட்டது. கறுப்பு நிற காலணிகள் அணிந்து பணி செய்தோம்," என்றார் சுல்தானா.
 
"நான் விமான நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு முதல் வகுப்பு கேபின் குழுவின் ஆடை வித்தியாசமாக இருந்தது, அங்கு பணியாற்றிய பணிப்பெண்கள், லெஹெங்காக்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து மிக அழகாக தோற்றமளித்தனர்," என்றார் அவர்.
 
இந்த விஷயத்தில் சுல்தானா அப்துல்லாவுடன் மிதா ஜோஷி உடன்படுவதாக தெரிகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், புடவைகளை அணிந்த இந்த பணிப்பெண்களை பயணிகளும் பொதுமக்களும் ஆச்சரியமாக பார்த்ததாக அவர் கூறுகிறார். சிலர் அந்த பணிப்பெண்களுடன் படங்களை எடுத்துக்கொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
 
மிதா ஜோஷி, 1985இல் ஏர் இந்தியாவில் வேலை செய்தார். தமது அனுபவங்களை திரும்பிப்பார்த்த அவர், "எங்கள் பயிற்சி சிறப்பாக இருந்தது, பயணி எப்போதும் சரியாக இருக்கிறார், அவருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்' என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
 
"ஒரு பணிப்பெண் எப்போதும் கூடுதலாக ஒரு சீருடை வைத்திருப்பது மிகவும் முக்கியம், அவர் எப்போதும் புடவைகளை அழகாக உடுத்திக்கொண்டு தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
 
"நாங்கள் புடவைகளை அணியும்போது, ​​உடலின் எந்தப் பகுதியும் வெளியில் இருப்பவர்கள் பார்க்காதவண்ணம் உடுத்த வேண்டும். பணிப்பெண்களுக்கு புடவை அணிவதில் சிக்கல் இருந்ததைத்தொடர்ந்து. பின்னர் எங்களுக்கு குர்தாக்கள் வழங்கப்பட்டன," என்றார் மிதா ஜோஷி.
 
சுல்தானா அப்துல்லா இந்த தொழிலில் பெண்களின் அழுத்தத்தை பற்றி நம்மிடையை விவரித்தார்.
 
மீனா என்ற பணிப்பெண், உடலின் எந்த பாகமும் தெரியாத வகையில் சேலை அணிந்திருந்தார். விமான பயணத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற பணிப்பெண் இங்கும் அங்கும் ஓடி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயணத்தில் நீண்ட நேரம் காலில் நிற்க வேண்டிய நிலை வருகிறது. அத்தகைய பணிப்பெண்கள் ஏன் வசதியான உடையை அணியக்கூடாது? என்று கேட்கிறார் சுல்தானா.
 
"புடவை அணிந்து கொண்டு பணிப்பெண்ணால் அவசரகாலத்தில் இயங்க முடியுமா? அது அவர்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலும், ஹை ஹீல்ஸ் முதுகெலும்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது கவனிக்கப்பட வேண்டும்," என்றார் சுல்தானா.
 
டாக்டர் அமீர் சுல்தானா, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுத் துறையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.
 
"என்னிடம் ஆராய்ச்சிக்காக வந்த மாணவர்கள் விமான பணிப்பெண்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்தபோது, அவர்கள் தவறாக பார்க்கப்படும் விதத்தை பாலியல் சீண்டலுக்கு கீழ் உள்ள குற்றமாக கருத வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்,"
 
ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் டேரியா இது பற்றி கூறுகையில், "நாங்கள் ஒரு விமான பயணத்தின்போது, ​​அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கும்போது, அனைவரின் கண்களும் எங்களை நோக்கியே இருந்தன," என்று தெரிவித்தார்.
 
"எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குக் காட்டுகிறீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக செய்முறை பொருட்களை பணிப்பெண்கள் எடுக்க வேண்டும். பணிப்பெண் அணியும் ஆடை இறுக்கமானதாக இருக்கும். அதுவும் குட்டை ஸ்கர்ட் என்றால் கவனமாக குனிந்து எழ வேண்டும். இந்த கஷ்டங்களை நாங்கள் அறிந்திருந்தோம்," என்றார்.
 
ஆமீர் சுல்தானா ஒரு பெண்ணின் அழகை அவரது ஆடையால் வரையறுக்க முடியாது என்று கூறுகிறார். ஒரு பெண்ணின் உடல் ஒரு பொருள் அல்ல, அவர் ஒரு மனிதர் என மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவசரகாலத்தில் வேலை செய்யும் போது பணிப்பெண் ஆடை வசதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
 
"ஒரு பெண்ணின் உடல் எவ்வளவு குறைவாக மூடப்பட்டிருக்கிறதோ, அவ்வளவு அழகாக அவர் தோற்றமளிக்கிறார் என்ற இந்தப் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
 
ரஷ்மி சோனி, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தொடர்பு அலுவலர். 2014ஆம் ஆண்டு முதல் அவர் விஸ்தாராவில் இருக்கிறார், இந்த விமான நிறுவனம் 2015இல் தொடங்கப்பட்டது.
 
இவரைப் பொருத்தவரை, யுக்ரேனிய விமான நிறுவனங்கள் ஒரு நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளன, எந்தவொரு விமான நிறுவனமும் அதன் ஊழியர்கள் நல்ல சேவையை வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது தனது ஊழியர்களை சரியான வகையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.
 
மற்ற விமான நிறுவனங்களில் பணிப்பெண்கள் அணிந்திருக்கும் ஆடை குறித்து அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
 
ஆனால் எந்த சேவைத் துறையிலும் நீங்கள் அழகாக இருப்பது முக்கியம் என்று அவர் கருதுகிறார்.
 
அதிக உணவை உட்கொண்டு உடலை பெருத்துக் கொள்ளாமல், தலை முடியை நேர்த்தியாகக் கட்டி தொழில்முறையாக தோற்றமளிப்பது முக்கியத்துவம் என்கிறார் ரஷ்மி சோனி.
 
"நாங்கள் விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பாக தொழில் தரங்களைப் பார்த்தோம், பெண்கள் கேபின் குழுவினர் குட்டை ஸ்கர்ட் அணிவதையும் ஆண்கள் பேன்ட் அணிவதையும் கவனித்தோம். அழகாகவும், நவீனமயத்துக்கு ஏற்பவும் நாங்கள் மாறும்போது அழகாகவும் சமகாலத்துக்கு தக்கபடியும் இருப்பதை நாங்கள் உறதிப்படுத்த விரும்பினோம். காரணம், நாம் பணியாற்றும் பகுதி, வாடிக்கையாளர் சேவை சார்ந்தது.
 
"பணிப்பெண்கள் விமான பயணத்தின்போது அதிக நேரம் நின்று பயணம் செய்ய வேண்டியதையும் பயணிகளுக்கு தலையை குனிந்து சேவை செய்வதை பற்றியும் நாங்கள் அறிவோம். அதனால்தான் அவர்கள் அப்படி வேலை செய்யும்போது அவர்களுக்கு ஆடை சங்கடமாக இருக்கக் கூடாது என நாங்கள் விரும்பினோம்," என்றார் ரஷ்மி சோனி.
 
 
விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஆடைக் குறியீடு
 
ரஷ்மி சோனி, "எங்களுடைய விமான நிறுவனத்தில் பணிப்பெண்களுக்காக சிகரெட் பாக்கெட் மற்றும் ஷார்ட் டூனிக் கொண்ட தங்க காலர் மற்றும் பிளாக் ஹீல்ஸ் காலணிகளை வழங்கியுள்ளோம். எங்கள் ஆடைக்கு விருதுகளும் கிடைத்துள்ளன, வாடிக்கையாளர்களும் பாராட்டுகிறார்கள்" என்றார்.
 
இதேவேளை தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர், பிபிசிக்கு எழுதிய மின்னஞ்சலில், "விமானப் பணிப்பெண்களின் சீருடைகள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு போன்ற நாட்களிலும் வேலை நாட்களிலும் வெவ்வேறு வித சீருடைகளை இந்தியாவிலேயே முதல் முறையாக வழங்கியிருப்பது எங்களுடைய நிறுவனம்தான்," என்று கூறியுள்ளார்.
 
 
இண்டிகோ ஏர்லைன்ஸ் பெண் குழு உறுப்பினர்
 
விமான நிறுவனங்கள் தரத்தை மாற்றின
 
இந்தத் தொழிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்திலிருந்து விலகி, பணிப்பெண்களுக்கான பழைய கால ஆடைக் குறியீட்டை பல விமான நிறுவனங்கள் நீக்கி உள்ளன. அவற்றில் ஒன்று விர்ஜின் அட்லான்டிக். அங்கு கேபின் குழுவினர் ஒப்பனை செய்ய தேவையில்லை.ஜப்பான் ஏர்லைன்ஸ் ஹை ஹீல்ஸை நீக்கியுள்ளது. மேலும், தமது பணிப்பெண்களுக்கு பென்சில் ஸ்கர்ட்களுக்கு பதிலாக கால்சட்டைகளை வழங்கியிருக்கிறது. நார்வேஜியன் ஏர் விமான நிறுவனம், தமது பணிப்பெண்கள் தட்டையான காலணிகளை அணியலாம் என்றும் அவர்களுக்கு ஒப்பனை அவசியமில்லை என்றும் கூறியிருக்கிறது.