செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (13:58 IST)

ஆதிமனித வரலாறு: ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம் -மண்டை ஓட்டில் வெளியான ரகசியம்

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மனித இனம் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆதி மனித இனம் வாழ்ந்திருந்தது இதற்கு முன்பு அறியப்படவில்லை. இஸ்ரேலில் உள்ள ராம்லா எனும் நகரத்தின் அருகே கண்டறியப்பட்டுள்ள இந்த எச்சங்கள் அந்த ஆதி மனித இனத்தில் "கடைசியாக வாழ்ந்திருந்தவர்களின்" எச்சங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு ஆகியவையும் தற்போது கண்டறியப்பட்டுள்ள எச்சங்களில் அடக்கம்.

இந்தக் கண்டுபிடிப்பின் விவரங்கள் 'சயின்ஸ்' எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய பகுதியில் நியாண்டர்தால் மனிதர்களும் அவர்களுக்கு நிகரான ஆசிய மனித இனத்திற்கும் தோற்றமாக அமைந்த, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓர் ஆதி கால மனித இனத்திலிருந்து தற்போது கண்டறியப்பட்டுள்ள மனித இனம் தோன்றி இருக்கலாம் என்று இந்த குழுவின் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தற்பொழுது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த இனக்குழுவின் பரம்பரைக்கு 'நேஷெர் ராம்லா ஹோமோ' (Nesher Ramla Homo) என்று பெயரிட்டு அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய கதைக்கு, குறிப்பாக நியாண்டர்தால் மனிதனின் பரிணாம வளர்ச்சியை பற்றிய கதைக்கு, இந்தக் கண்டுபிடிப்பு மறுவடிவம் தருவதாக டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஹிலா மே தெரிவித்துள்ளார்.

"இது அனைத்தும் இஸ்ரேலில் தொடங்கியுள்ளது; இங்கு கண்டறியப்பட்டுள்ள எச்சங்கள்தான் பிற இனத்தினருக்கான தோற்றமளித்த ஆதாரமாக இருந்துள்ளது. இடைப் பனிக்காலத்தின் து இந்த நேஷெர் ராம்லா இன மக்கள் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து ஐரோப்பிய பகுதியை நோக்கி அலை அலையாக புலம் பெயர்ந்தனர்," என்று பிபிசி நியூசிடம் அவர் தெரிவித்தார்.

சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியர் ஈஸ்ட் பகுதியில் நேஷெர் ராம்லா மனித இனத்தின் தொடக்ககால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று இந்த ஆராய்ச்சிக் குழுவினர் நம்புகிறார்கள்.

ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களுக்கு முந்தைய கால ஆதி மனிதர்கள் மற்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆதிமனிதர்கள் ஆகியோரிடையே ஒற்றுமை இருப்பதையும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லெவன்ட் (Levant) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெவ்வேறு இனங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை முதல்முறையாக எங்களால் அறிய முடிகிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ரேச்சல் சரீக் தெரிவிக்கிறார்.

கெசம், ஜூட்டியே, தாபுன் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள குகைகளில் பல மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை இந்த குறிப்பிட்ட மனித இனத்தை சார்ந்தவைதான் என்று கூற முடியாத ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.

தற்போது நேஷெர் ராம்லா இனத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எச்சத்துடன் அவற்றின் வடிவங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அவற்றையும், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஆதி மனித இனத்திற்கு உள்ளடக்க முடிகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஆதி மனித இனம் நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் என்று முனைவர் ஹிலா மே தெரிவிக்கிறார்.

தொடக்க காலத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் லெவன்ட் பகுதியில் இருந்தார்கள். பிற மனித இனங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்போது ஐரோப்பிய பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று அவர் தெரிவிக்கிறார்.

மற்றவர்கள் கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்து தற்போது இந்தியா மற்றும் சீனா இருக்கும் பகுதிகளுக்கு சென்றனர். கிழக்காசியாவில் வாழ்ந்த அழிந்துபோன மனித இனத்துக்கும் ஐரோப்பாவில் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனத்துக்கும் இடையே இதன் காரணமாக தொடர்பு இருக்கக்கூடும் என்று பேராசிரியர் இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிச் தெரிவிக்கிறார்.

கிழக்கு ஆசியப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில படிமங்கள் நேஷெர் ராம்லா மனித இனத்தை போலவே நியாண்டர்தால் மனித இனத்தின் கூறுகளை கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறும் முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் படிமங்கள் மற்றும், ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் படிமங்கள் ஆகியவற்றின் இடையே இருக்கும் ஒற்றுமைகள் அடிப்படையில் தாங்கள் இவற்றை கூறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் சீனாவில் வாழ்ந்திருந்த மனிதர்களின் எச்சங்களை சமீப காலமாக ஆய்வு செய்து வருகிறார்.

வெவ்வேறு மனித இனங்கள் ஒரே காலகட்டத்தில் ஒரே பகுதியில் வாழ்ந்து இருந்தனர் என்பதை நேஷெர் ராம்லா ஆதி மனித இனத்தின் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது. மேற்கு ஆசியப் பகுதிகளிலும் இதே போல நடந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பழங்கால மனித படிமங்களை நியாண்டர்தால் மனிதர்கள் உடன் தொடர்புபடுத்துவது இப்பொழுதே, மிகவும் முன்கூட்டியே கணிப்பு என்று நான் கருதுகிறேன். நேஷெர் ராம்லா மனித இனத்தின் எச்சங்கள் மற்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித படிமங்கள் ஆகியவற்றின் இடையே குறிப்பிட்ட தொடர்புகள் ஏதேனும் இருக்குமா என்பது பற்றியும் நான் குழப்பமாக உள்ளேன் என்று அவர் கூறுகிறார்.

நேஷெர் ராம்லா இனத்தின் எச்சங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் புழங்கிய பகுதியில் அமைந்திருக்கும் புதைகுழி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பகுதியில் அவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடி இருக்கலாம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான கல் கருவிகளும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எலும்புகளும் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.