ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (16:10 IST)

குண்டு வீசும் போர் விமானங்களை இரானுக்கு அனுப்பும் அமெரிக்கா

விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களை இரானுக்கு அனுப்புகிறது அமெரிக்கா.
 
பல தொந்தரவு தரும், பதற்றத்தை அதிகரிக்கும் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா செயல்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்தே போர்க் கப்பல் அனுப்பப்படுவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்கப் படையினர் மீதோ, அதன் கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் தணியாத ஆற்றலோடு பதிலடி தரப்படும் என்று ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
 
யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும், குண்டு வீச்சு படையும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தெளிவான செய்தியை இரான் அரசுக்கு அனுப்பும்" என்று போல்டன் தெரிவித்துள்ளார்.
 
இரானுடன் அமெரிக்கா சண்டையிட முனையவில்லை. ஆனால், இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, இரான் பாதுகாப்புப் படையாக இருந்தாலும் சரி, ஏதாவது தாக்குதல் நடத்தினால், பதிலடி தருவதற்கு முழுவதுமாக தயாராக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
உரசலின் பின்னணி
அதிபர் ஒபாமா காலத்தில் 2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் இரானுடன் செய்துகொண்ட பன்னாட்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கத் தரப்பு மட்டும் ஒரு தரப்பாக வெளியேறியது.

அணு ஆயுத சோதனைகள் செய்யாமல் இருப்பதற்காக இரானுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் அது. அமெரிக்கா வெளியேறினாலும், பிற ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன. ஆனால், தாம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியவுடன் இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
 
இரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு சீனா, இந்தியா, தென்கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு தாம் விதித்த பொருளாதாரத் தடையில் இருந்து விதிவிலக்கு அளித்துவந்தது அமெரிக்கா. ஆனால், இந்த தடையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது.
 
அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து இரான் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பண மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. இதனால், ஆண்டு பண வீக்க விகிதம் நான்கு மடங்காக உயர்ந்தது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள். உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின.