1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:26 IST)

அம்பேத்கர் சம்ஸ்கிருதத்தை இந்திய அலுவல் மொழியாக்க திட்டம் தயாரித்தார்: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

(இன்று 15.04.2021 வியாழக்கிழமை, இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

இந்தியாவின் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதத்தை ஆக்குவதற்கு பி.ஆர்.அம்பேத்கர் ஒரு முன்மொழிவைத் தயாரித்தார் ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே பேசியதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 14) மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய எஸ் ஏ பாப்டே "நான் எந்த மொழியில் பேசுவது என யோசிக்கிறேன். மராத்தியிலா? ஆங்கிலத்திலா? இந்த தடுமாற்றம் பல காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் எந்த மொழியில் இயங்க வேண்டும் என்கிற கேள்வியும் அடிக்கடி எழுவதைப் பார்க்கிறேன். ஆங்கிலம் அல்லது இந்தியை அலுவல் மொழியாகக் கொண்ட உயர் நீதிமன்றங்கள் உள்ளன. சிலர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்கிறார்கள். வேறு சிலர் தெலுங்கு வேண்டும் என்கிறார்கள்."

"இந்த விவகாரத்தில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. டாக்டர் அம்பேத்கர், இந்த பிரச்சனையை முன்பே எதிர்பார்த்து ஒரு திட்டத்தையும் தயாரித்தார். அத்திட்டத்தை தாக்கல் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அத்திட்டத்தில் முல்லாக்கள், பண்டிதர்கள், மதகுருக்கள் கையெழுத்திட்டனர். அம்பேத்கரின் கையெழுத்தும் இடம் பெற்றது. இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பது தான் அத்திட்டம்" என்று கூறினார் பாப்டே.

மேலும் "தமிழ் மொழியை வட இந்தியா ஏற்றுக் கொள்ளாது. இந்தியை தென் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்கிற கருத்தில் இருந்தார் அம்பேத்கர். ஆனால் சம்ஸ்கிருதத்தை வட இந்தியாவோ அல்லது தென் இந்தியாவோ எதிர்க்காது. எனவே அத்திட்டத்தை உருவாக்கினார், ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை" என்று குறிப்பிட்டார் பாப்டே என்கிறது அச்செய்தி.

"அம்பேத்கர் சட்ட வல்லுநர் மட்டுமல்ல. சமூக ரீதியாக, அரசியல்ரீதியாக என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை கிரகித்துக்கொண்டவர். மக்கள் என்ன வேண்டினார்கள், ஏழைகள் என்ன வேண்டினார்கள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் இந்த முன்மொழிவை அவர் தயாரித்தார் என்று நினைக்கிறேன்.

ஆனால், கடைசியாக ஆங்கிலமே அலுவல் மொழியாக ஆனது. எனவே, இது தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என்பதால் உங்கள் அனுமதியோடு நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்" என்று பாப்டே கூறியதாகவும் தெரிவிக்கிறது அந்தச் செய்தி.

பண்டைய சம்ஸ்கிருத நெறியான நியாய சாஸ்திரம் தொடர்பான ஒரு படிப்பை அறிமுகம் செய்ய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதையும் அவர் பாராட்டினார்.

இந்திய நீதி வழங்கல் முறை ஆங்கில சாக்சானிய நீதிவழங்கல் முறையை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஆங்கல சாக்சானிய நீதிவழங்கல் முறை அரிஸ்டாடிலிய, பாரசீக தர்க்கவியலை அடிப்படையாக கொண்டது. நியாய சாஸ்திரம் அந்த அரிஸ்டாடில் முறைக்கு ஒரு அங்குலமும் இளைத்தது அல்ல என்றும் பாப்டே கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் இருமுடி கட்டிவந்து சபரிமலையில் வழிபாடு

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்ததாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவில் நடை விஷூ மற்றும் சித்திரை மாத பூஜையை ஒட்டி கடந்த 10-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் பம்பை வந்து, அங்குள்ள கணபதி கோவிலில் வைத்து இருமுடி கட்டினார். அங்கிருந்து நடை பயணமாக சுவாமி அய்யப்பன் சன்னிதானத்தின் வலிய நடைப்பந்தலுக்கு வந்தார்.

அங்கு அவரை திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர் எஸ்.ரவி, ஆணையர் பி.எஸ். திருமேனி ஆகியோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, படி பூஜைக்கு பின், இரு முடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானம் வந்த கவர்னர் சாமி தரிசனம் செய்தார். கவர்னருடன் அவரது இளைய மகன் கபீர் முகமது கானும் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் இரவு சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். நேற்று காலை மீண்டும் நெய்யபிஷேகம் நடத்தி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் சன்னிதானத்தில் மாளிகப்புரம் கோவில் அருகில் சந்தன மரக் கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதை தொடர்ந்து, கவர்னர் ஆரிப் முகமது கான் நடைபயணமாக பம்பை வந்து அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடை எங்களது... டோக்கன் யாருதுன்னு தெரியல!

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட 'அந்த 2000 ரூபாய் டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடை வாசலில் எழுதி ஒட்டி இருப்பதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

தேர்தல் பிரசார காலத்தில் கும்பகோணத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டோக்கனில் 'பிரியம் மளிகை ஏஜென்ஸிக்குச் சென்றால் 2,000 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்' என பொருள் படும் ரீதியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

டோக்கனோடு கடைக்கு படையெடுத்தவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போன கடை ஊழியர்கள், ஒரு கட்டத்தில், 'வேட்பாளர்கள் வழங்கிய டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என அச்சடித்து கடை வாசலில் ஒட்டி வைத்துவிட்டார்கள்.

"25 வருடமாக கடை நடத்துகிறேன். இப்படியெல்லாம் எந்த கட்சிக்கும் டோக்கன் கொடுத்தது கிடையாது. யாரோ கொடுத்திருக்கும் இந்த டோக்கனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கடையின் பெயரை பயன்படுத்தி யார் இந்த வேலையைச் செய்தார்கள் எனத் தெரியலை" என பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பிவருகிறார் கடையின் உரிமையாளர் ஷேக் முகமது.

இதனிடையே, இந்த டோக்கன் விநியோகம் தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் என்பவர் மீது கும்பகோணம் போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.