1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (15:38 IST)

சுமார் 25 லட்சம் மக்கள் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றதாக தகவல்

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 2,481,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.


இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 22,300 பேர் கடந்துள்ளனர், இது சனிக்கிழமை அன்று கடந்த மக்களின் எண்ணிக்கையை விட 6% குறைந்தது, என போலந்து எல்லைக் காவல்படை ட்விட்டரில் தெரிவித்திருந்தது, மேலும் இது மார்ச் 6 இல் இருந்த 1,42,300 என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைந்தது.

போர் தொடங்குவதற்கு முன்பு போலந்திற்கு செல்ல எல்லையைக் கடப்பவர்களின் தினசரி சராசரி எண்ணிக்கை 16,800 ஆக இருந்த நிலையில், தற்போது யுக்ரேனுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்து, போலந்து வழியாக 4,57,000 பேர் யுக்ரேனுக்குள் நுழைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும், போலந்தில் இருந்து யுக்ரேனுக்குள் 15,000 பேர் சென்றுள்ளனர், இது சனிக்கிழமை 21,000 ஆக இருந்தது.

யுக்ரேனில் இருந்து தப்பியோடியவர்களில் சிலர் ஏற்கனவே போலந்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இது தொடர்பாக வார்சா பல்கலைக்கழக இடம்பெயர்வு ஆராய்ச்சி பேராசிரியர் மாசிஜ் டசிக்கின்படி, சுமார் 1.3 முதல் 1.4 மில்லியன் அகதிகள் போலந்தில் உள்ளனர் என தெரிவித்திருக்கிறார்.