1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By திருமலை சோமு
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (23:29 IST)

அமெரிக்காவை கரோனாவிலிருந்து மீட்டெடுக்குமா ஜோபைடன் அரசு

அமெரிக்க தேர்தல் முடிவுகள் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இறுதி முடிவு வெளியிடப்பட்டு இருப்பினும், நாட்டின் பொது சுகாதார நெருக்கடி மற்றும் அதன் தாக்கங்களில் இருந்து மீள புதிய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது அடுத்த 4 ஆண்டுகளில் என்ன என்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படப்போகின்றன என்ற கவலைதான், யார் வெள்ளை மாளிகையின் சாவியை பெறப் போகிறார்கள் என்ற கவலையை விட பெரும் கவலையாக இருக்கிறது. 
 
டிரம்ப் அரசு கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட்டுவிட்டு, நாட்டின் ஜனநாயகம் என்ற பெயரில் உலக சுகாதார நிறுவனம் வகுத்த விதிமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை. ஒருபுறம் சீனா போன்ற நாடுகளுடன் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்குவதிலும், வைரஸ் பரவல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதிலும் கவனம் செலுத்தியது. மறுபுறம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் கரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா இன்னமும் தத்தளித்து வருகிறது என்பதே உண்மை. 
 
இன்றைய சூழலில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நவம்பர் 7 ஆம் நாள் ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 888 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை அங்கு 99 லட்சத்து 26 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது என்பது வைரஸ் பாதிப்பு அவ்வளவு எளிதாக மறைந்துவிடப் போவதில்லை என்பதை உணர்த்துகிறது. 
 
கடந்த வாரத்தில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, நியூக்ளிக் அமில சோதனைகளின் அளவு முந்தைய வாரத்திலிருந்து 4.52 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் புதிதாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் உயர்ந்துள்ளது, நாட்டில் ஒரு நாளைக்கு புதிய தொற்றுநோய்களின் உண்மையான எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என முன்னாள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையரான ஸ்காட் கோட்லீப் வெள்ளிக்கிழமை எச்சரித்தார். மேலும் புதிய அரசு பதவி ஏற்றதுமே நாட்டின் முழு ஆதரவோடு செய்ய வேண்டியதைச் செய்து முடிந்தாலும் கூட தொற்றுநோயின் பாதிப்பு நீண்ட வால் போல்தானிருக்கும் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள், மருத்துவ வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்களுடன் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பைடன், "தேர்தலின் இறுதி முடிவுக்காக காத்திருக்கும்போது, நாங்கள் மக்கள் பணியாற்ற காத்திருக்கவில்லை என்னுடைய அதிபர் பணியின் முதல் நாளிலிருந்தே, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிடுவேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
ஏற்கனவே லட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்துவிட்டோம். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் அதிலிருந்து மீண்டுவருவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அமெரிக்காவில் 2 கோடி மக்களுக்கும் அதிகமானோர் வேலையின்மையில் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்கு வாடகை தரமுடியாமலும், சாப்பிட வழியில்லாமலும் இருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையிலிருந்து விரைவாக மீண்டுவருவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
 
தற்போது அமெரிக்காவில் கடினமான குளிர்காலமாக இருப்பதால் நாட்டின் நிலைமையின் கசப்பான யதார்த்தம் மாறவில்லை. எனவே புதிய அரசுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு வேறு எந்த திட்டம் இருந்தாலும், உடனடி முன்னுரிமை என்பது தொற்றுநோய் தடுப்பு குறித்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.