1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2014 (12:09 IST)

ஈராக் போருக்கு இராணுவ ஆலோசனை: மேலும் 130 ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்பியது

ஈராக் போரில் 'ஐ.எஸ்.ஐ.எஸ்.' போராளிகளை எதிர்த்துப் போரிட்டு வரும் அரச படைகளுக்கு ஆலோசனைகள் வழங்க அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பிய 250 இராணுவ ஆலோசகர்களுடன் மேலும் 130 ஆலோசகர்களை அனுப்பியுள்ளது.
ஈராக்கில் அரசுக்கு எதிராக 'ஐ.எஸ்.ஐ.எஸ்.' தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மொசூல் உள்ளிட்ட ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 
இவர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக்குக்கு அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் படைகளை அனுப்ப அமெரிக்கா மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், போர் யுத்திகளை வழங்கவும் 250 இராணுவ ஆலோசகர்களை அனுப்பி வைத்தது.
 
தற்போது குர்தீஷ்தானில் பல இடங்களை தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அங்கு தங்கியிருந்த யாஷிடி பூர்வீக குடி இன மக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். சுமார் 50 ஆயிரம் பேர் அங்குள்ள சிஞ்சர் மலையில் தங்கியுள்ளனர்.
 
அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை அமெரிக்க இராணுவ சரக்கு விமானங்கள் வீசி வருகின்றன. மேலும் குர்தீஷ்தான் மாகாண தலைநகர் இர்பில் நகரை நோக்கி முன்னேற விடாமல் தடுக்க குர்தீஷ் படை வீரர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது.
 
மேலும் வான்வழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் குண்டு வீசி அழிக்கப்படுகின்றன. இது தீவிரவாதிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் மேலும் 130 இராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அவர்கள் குர்தீஷ்தான் தலைநகர் இர்பிலை சென்றடைந்துள்ளனர். அங்கு தங்கி குர்தீஷ் படை வீரர்களுக்கு போர் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
 
இந்தத் தகவலை அமெரிக்க இராணுவ அமைச்சர் சக் ஹகெல் தெரிவித்துள்ளார்.