வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (13:48 IST)

ஏரியா 51க்குள் நுழைந்தால் அவ்வளவுதான்: அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகள் பயங்கரமானதாக இருக்கும்” என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலகில் மனிதர்களால் செல்ல முடியாத பல பகுதிகள் உண்டு. அதன் மர்மங்களை யாராலுமே தெரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதுபோல மனிதர்களால் செல்ல முடியாத அளவுக்கு அமெரிக்க ராணுவத்தால் தடை செய்யப்பட்டுள்ள பகுதி அமெரிக்காவின் நெவேடா பகுதியில் உள்ளது.

ஏரியா 51 என்ற அந்த பகுதிக்குள் ரகசிய ஆராய்ச்சிகள் நடந்து வருவதாய் நம்பப்படுகிறது. மேலும் ஏலியன்கள் நடமாட்டம் ஏரியா 51 பகுதியில் அதிகமிருப்பதாக அந்த பகுதியை சார்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். உண்மையில் ஏரியா 51 என்றால் என்ன? அங்கு ஏலியன்கள் வாழ்கிறதா?

1950களில் இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்காவுக்கு ஆயுத சோதனைகள் செய்யவும், புதிய ரக விமானங்களை உருவாக்கவும், எந்த நாடுகளாலும் ஊடுறுவ முடியாத ரகசிய இடம் தேவைப்பட்டது. சிஐஏ எனப்படும் அமெரிக்க உளவுத்துறை லாஸ்வேகாஸுக்கு அருகில் உள்ள நெவேடா பாலைவனத்தில் உருவாக்கிய ரகசிய ஆராய்ச்சி இடம்தான் ஏரியா 51.

இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பல ஆண்டுகளாக மக்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1955ல் லாஸ் வேகாஸ் பகுதியில் முதல்முறையாக ஒரு ஏலியன் ஊர்தியை மக்கள் வானத்தில் பார்த்ததாக கூறியபோதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின. ஏரியா 51 ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும், அந்த பகுதிக்கு ஏலியன்கள் வந்து போவதாகவும் செய்திகள் பரவின.

தற்போது அந்த ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய “ஸ்டோர்ம் ஏரியா 51” என்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. சுமார் 1 மில்லியன் மக்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து பாதுகாப்புகளை மீறி ஏரியா 51க்குள் நுழைந்து ஏலியன்களை பார்த்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

முகநூலில் ஏதோ வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்றுதான் முதலில் அமெரிக்காவும் நினைத்தது. ஆனால் விஷயம் விபரீதமாகிவிட்டது. ஏரியா 51க்குள் நுழைவதற்காக செப்டம்பர் 20ம் தேதியை அந்த குழு தேர்ந்தெடுத்துள்ளது. இப்போதே லாஸ் வேகாஸ் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களில் போராட்டக்காரர்கள் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

லாஸ் வேகாஸ், க்ரீன் லேக் விடுதிகள் அனைத்தும் இப்பொழுதே முழுவதும் புக்கிங் ஆகிவிட்டன. மேலும் “ஸ்டோர்ம் ஏரியா 51” சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் பரவிய இந்த சர்ச்சையால் பல நாடுகளை சேர்ந்த பலர் “ஸ்டோர்ம் ஏரியா 51” உடன் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது அமெரிக்க வான்வெளி தாக்குதல் படை. அதில் “ஏரியா 51 அமெரிக்க ராணுவ பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் உச்சபட்ச பாதுகாப்பான பகுதி. அதற்குள் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படி அத்துமீறி யாராவது நுழைய முயன்றால் அமெரிக்க இராணுத்தின் சட்டப்படி தண்டிக்கப்படுவர். வீணான வதந்திகளை நம்பி யாரும் அத்துமீற வேண்டாம்” என்று கூறியுள்ளது. இது மேலும் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.