ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (10:57 IST)

ஆக்கிரமித்த பகுதிகள் தனிநாடு, வெளியேறும் உக்ரைன் மக்கள்! – உக்ரைனில் என்ன நடக்கிறது?

Mariyupol
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வரும் நிலையில் ஆக்கிரமித்த பகுதிகளை தனிநாடாக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சோகமும் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இதனால் உக்ரைனும் அவ்வபோது ரஷ்ய ராணுவம் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உக்ரைன் அறிவித்துள்ளபடி கருங்கடலில் மையம் கொண்டுள்ள ரஷ்ய போர்க்கப்பல்களில் 2 கப்பல்களை உக்ரைன் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
Ukraine

மரியுபோலில் ரஷ்யா பல நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள உருக்காலையில் மக்கள் பலர் தஞ்சம் அடைந்திருந்தனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் ஆலையினுள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யா தான் ஆக்கிரமித்த உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை சுதந்திர நாடாக அங்கீகரிக்க முயற்சித்து வருவதாய் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர்  மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார்.