செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயினங்கள் வாழ்ந்தனவா அல்லது வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து பல நாடுகளும் பல்வேறு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
செவ்வாய் கிரகத்தில் கடந்த 8 வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் க்யூரியாசிட்டி ரோவர் பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஒஹாயோ பல்கலைகழக பூச்சியியல் ஆய்வாளர்கள் செவ்வாயில் பூச்சியினங்கள் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்களில் பதிவான மணலின் மேற்பரப்பை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அதில் பூச்சியினங்கள் நடந்து சென்றதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். பொதுவாக எறும்பு, தேனீ போன்ற பூமியை சேர்ந்த பூச்சிகள் போல தலை மேல் இரண்டு ஆண்டனாக்கள், ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், ஊர்வன ரக பூச்சிகளும் இப்போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதை வேறு சில விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். காற்றினால் மணல் மேற்பரப்பில் ஏற்படும் காட்சி பிழைகளை ஆய்வாளர்கள் பூச்சியின் தடங்கள் என தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், உணவு உற்பத்திக்கான காரணிகள் எதுவும் இல்லாத கிரகத்தில் பூச்சிகள் வாழ வாய்ப்பில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.