1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:24 IST)

யுக்ரேன் நெருக்கடி: ராஜரீக தீர்வுக்கு ரஷ்யா சம்மதம்!

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். 

 
யுக்ரேன் எல்லைக்கு அருகில் 1,90,000 துருப்புகள் வரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க தயாராக உள்ளதாக, மேற்கு நாடுகள் நம்புகின்றன. யுக்ரேன் மீது ரஷ்யா எந்நேரமும் படையெடுக்கலாம் என, அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், அதனை ரஷ்யா மறுத்துவருகிறது. இதனிடையே, உடனடி படையெடுப்பு குறித்த பேச்சுக்கள் “பொருத்தமற்றது” என, யுக்ரேன் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று (பிப். 20) தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், “ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 
 
மேலும், வரும் நாட்களில் யுக்ரேன் – ரஷ்யா இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்திப்பு நடத்த புதின் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல் குறித்து மாஸ்கோ தரப்பு கூறுகையில், பதற்றத்தை அதிகரித்ததாக, யுக்ரேன் ராணுவம் மீது புதின் குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளது.