வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (20:05 IST)

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் ஆட்சி பறிபோகும் ஆபத்து: இம்ரான் கான் பேரணியால் பதற்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரிப் கட்சி) கட்சி மொத்தம் உள்ள 342 எம்.பி. தொகுதிகளில் 190-ஐ இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, அக்கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரிப் அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.
 
தேர்தலில் முறைகேடு செய்து நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன்சாப் கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் குற்றம்சாற்றினார். அவர் பதவி விலகி மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடந்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 
இதேபோல் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சி தலைவர் மதகுரு தகிருல் காத்ரியும் நவாஸ் ஷெரிப் பதவி விலக கோரிக்கை விடுத்திருந்தார். அவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டதாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் தகிருல் காத்ரி குற்றம்சாற்றினார்.
 
நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி 350 கி.மீட்டர் தூர பேரணியை அவர் தொடங்கினார். அதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இம்ரான் கானும் 1 லட்சம் தொண்டர்களுடன் பேரணியை தொடங்கினார். 2 பேரணிகளும் பாகிஸ்தான் சுதந்திர தினமான கடந்த 14 ஆம் தேதி இஸ்லாமாபாத்தை அடைந்தது. பேரணிக்கு அரசு அனுமதி அளித்தது.
 
ஆனால் ‘ரெட் ஜோன்’ எனப்படும் முக்கிய பகுதிக்குள் நுழையக்கூடாது என நிபந்தனை விதித்திருந்தது. இங்குதான் நாடாளுமன்றம் பிரதமர் அலுவலக இல்லம், ஜனாதிபதி மாளிகை, வெளிநாட்டு தூதரகங்கள் போன்றவை உள்ளன. பேரணியில் பங்கேற்கும் தொண்டர்கள் ‘ரெட் ஷோன்’ பகுதிக்குள் நுழையாமல் தடுக்க அதைச்சுற்றி கப்பல் கண்டெய்னர்கள் மற்றும் முள்வேலிகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
 
தனித்தனியாக வந்த இருகட்சி தொணடர்களின் பேரணி இஸ்லாமாபாத்துக்குள் ஒன்றாக இணைந்தது. இதனால் அங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொண்டர்கள் மத்தியில் இம்ரான் கானும், மதகுரு தகிருல் காத்ரியும் எழுச்சி மிகு உரையாற்றினார்கள். இதனால் தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
 
நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவியில் இருந்து விலகி தேர்தல் நடத்த வழிவிடவேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். சுமார் 50 ஆயிரம் போலீசாரும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட் ஜோன்’ பகுதியான நாடாளுமன்றம் முன்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவம் ஆட்சியை கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நவாஸ் ஷெரிப் ஆட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கானை சந்தித்துப் பேச நவாஸ் ஷெரிப் முடிவு செய்துள்ளார். 
 
நாட்டின் நலன் கருதியே இந்த திடீர் முடிவை நவாஸ் ஷெரிப் எடுக்க நேர்ந்ததாக அவரது அமைச்சரவையில் அமைச்சராக உள்ள சாட் ரஃபிக் தெரிவித்துள்ளார்.