வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (17:56 IST)

இந்தியாவுடன் பேசுவதற்கு முன்பு காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேசுவோம் - நவாஸ் ஷெரீஃப்

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களுடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் அவர் வியாழக்கிழமை பேசியதாவது:
 
காஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. அதனடிப்படையிலேயே இந்தியாவுடன் எனது அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியது. ஆனால், இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தையை அந்நாடு (இந்தியா) ரத்து செய்து விட்டது.
 
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, காஷ்மீர் தலைவர்களுடன்  (பிரிவினைவாத தலைவர்கள்) பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இந்தியாவை சர்வேதச நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
 
எல்லைப் பகுதிகளில், இந்திய ராணுவம் அண்மையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இரு நாடுகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை, இந்தியா அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது.
 
காஷ்மீர் விவகாரத்தை உலக அளவில் அனைத்து அமைப்புகளிலும் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா. சபையின் கவனத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கொண்டு சென்றது. காஷ்மீர் விவகாரத்தில், ஐ.நா. சபையும், சர்வேத நாடுகளும் அமைதி காப்பது கவலையளிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானங்களின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நவாஸ் ஷெரீஃப்.