வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (20:15 IST)

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் கைது

மலாலாவை துப்பாக்கியால் சுட்ட நபர்களை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வந்த குழந்தைப் போராளி மலாலா யூசுபாய், கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த அவர், லண்டனில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
 
தற்போது லண்டனில் வசித்து வரும் அவர், அங்கிருந்தபடி பிரச்சாரத்தை தொடர்கிறார். அவருக்கு கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மதிப்பு மிக்க மனித உரிமை விருது வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
 
இதற்கிடையே, பாகிஸ்தானில் ராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் 10 பேரும் மலாலா மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று ராணுவ மேஜர் ஜெனரல் ஆசிம் பஜ்வா இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தலிபான் இயக்கத்தின் தற்போதைய தலைவர் மவுலானா பஜ்லுல்லாவின் உத்தரவுப்படி மலாலாவை கொலை செய்ய இந்த குழுவினர் திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.