தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.
இந்த உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இதனை தொடர்ந்து இதனை விசாரித்த நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தடை விதித்தனர். மீண்டும் டிரம்ப் சார்பில் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் மூவரும் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பையடுத்து ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் விசா எடுத்துக்கொண்டு அமெரிக்கா வரலாம் என்றும், அகதிகளுக்கும் அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு பின்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என்றும், மேலும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.