1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (13:18 IST)

உக்ரைனின் கிழக்குபகுதி மக்கள் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பு

உக்ரைனின் கிழக்கு பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி போராடி வரும் மக்கள், போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் ஒருபகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
 
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன், மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் தலைவர்கள் ரஷ்யாவுடன் இணைய விரும்பும் மக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். அதன்படி கிழக்கு உக்ரைனை கைப்பற்றியுள்ள மக்கள் அரசு அலுவலகங்களை திரும்ப ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 
ஆனால் அதனை ஏற்க மறுத்துள்ள அப்பகுதி மக்கள், சட்டவிரோதமாக அமைந்துள்ள உக்ரைன் அரசு, பாராளுமன்றத்தைக் காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ‘டொனஸ்க் மக்கள் குடியரசு‘ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை போராட்டத்தில் ஈடுபபட்டுவரும் அலெக்சாண்டர் நெஸ்டிலோவ் என்பவர் தெரிவித்துள்ளார். ஒன்பதுக்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்த மக்கள் இத்தகு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அரசு கட்டிடங்களை கைப்பற்றியுள்ளனர். எனவே அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது.
 
தலைநகர் கீவின் மைதான சதுக்கத்தில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய ஆதரவாளர்கள் வெளியேறும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.