1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (14:19 IST)

சுனாமியில் இறந்ததாகக் கருதப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோருடன் இணைந்தார்

இந்தோனேஷியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்ததாகக் கருதப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனார்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய பெற்றோருடன் இணைந்துள்ளார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த சிறுமி ராவ்தாதுல் ஜன்னா. இவர் 2004 ஆண்டு சுனாமியில் அடித்து செல்லப்பட்டார். சிறுமி இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை அவரது பெற்றோர்கள் உயிருடன் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவரது தாயார் கூறுகையில், “எனது மகள் 4 வயதில் காணாமல் போனார். ஆனால் எனது மகள் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது“ என்று ஜன்னாவின் தாயார் ஜமாலியா தெரிவித்துள்ளார்.

ஜமாலியாவின் சாயலில் இருந்த ஜன்னா பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது ஜமாலியாவின் சகோதரர் பார்த்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கையில் சிறுமி சுனாமியில் அடித்து செல்லப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

சுனாமியில் அடித்துவரப்பட்ட சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு வளர்த்து வந்துள்ளனர். ஜமாலியாவும், ஜன்னாவை பார்த்து தனது மகள் என்று ஏற்றுக் கொண்டார்.

அவரது கணவரும், சிறுமியை பார்த்து எனது மகள் என்று உறுதி செய்தார். இதனையடுத்து சிறுமியை மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

இந்தோனேஷியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்ததாகக் கருதப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.