1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 8 நவம்பர் 2014 (15:33 IST)

இந்தியா-இஸ்ரேல் தாராள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்: இருநாட்டுத் தலைவர்கள் நம்பிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள நிலையில், இந்தியா-இஸ்ரேல் தாராள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று இருநாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை எதரிவித்துள்ளனர்.
 
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைநகர் டெல் அவிவில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை வெள்ளிக்கிழமை சந்தித்தார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் இது.
 
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வுக்கு புதன்கிழமை இரவு சென்றடைந்த ராஜ்நாத் சிங்கை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரிகள் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
 
சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை வியாழக்கிழமை இரவு ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். பிராந்திய நிலவரம், வளர்ந்து வரும் பயங்கரவாதம் ஆகியவை குறித்து அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
தீவிரவாதத்தால் இந்தியா, இஸ்ரேலுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார். மேலும், இணைய வழிக் குற்றங்கள், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 
அதற்கு ஒப்புதல் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த விவகாரத்தில் திறம்படச் செயலாற்ற இஸ்ரேல் ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்தார்.
 
பாதுகாப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், மற்ற துறைகளிலும் இணைந்து பணியாற்ற வழிகோலுவதாகத் தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பின் முடிவில், இந்தியா-இஸ்ரேல் இடையே தாராள வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என இரு நாட்டுத் தலைவர்களும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
 
இந்தியா-இஸ்ரேல் இடையேயான பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். இணையவழிக் குற்றங்களைத் தடுக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினேன் எனத் தெரிவித்தார்.
 
இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மோஷே யா அலோனை ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
 
அப்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு பாராட்டுத் தெரிவித்த மோஷே, இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி மையங்களைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.