வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (13:35 IST)

10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?

சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த #10YearChallenge கடந்த 2 வாரங்களாக வைரலாக பரவியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

பருவநிலை மாற்றம்

இந்த ட்வீட்டில் கால்பந்து வீரரான மெசூட் ஒசில், இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து, 10 ஆண்டுகளில் ஒரு பெரும் பனிப்பாறை எப்படி உருகியுள்ளது என்பதை பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த புகைப்படம் துல்லியமானது அல்ல. 2008 என்று போட்டிருக்கும் படம், அண்டார்டிகாவில் 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். எனினும், பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது என்ற பிரச்சனையை நாம் மறுக்க முடியாது.

நாம் ஏன் இந்த சேலஞ்சை தவிர்க்க வேண்டும்?

நாசாவின் கணக்குப்படி, அண்டார்டிகாவில் ஒவ்வொரு ஆண்டும் 127 கிகா டன்கள் பனி உருகுகிறது. அதேபோல, கிரீன்லாந்து, ஆண்டுக்கு 286 கிகா டன்கள் பனியை இழந்து வருகிறது.

புவியின் வெப்பநிலையும் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. இந்த ஹாஷ்டாகை இயற்கை ஆர்வலர்களும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலுள்ள கிரீன்பீஸின் பதிவு, 1928 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுடன், 2002ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் கிரிஸ்டியன் அஸ்லுந்த் எடுத்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான ஜெர்மன் தூதரான மார்டின் கோப்லர், பலுச்சிஸ்தானில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

உலகளாவிலான காலநிலை அபாய பட்டியலின்படி, கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

பிளாஸ்டிக் மாசு

2018 ஆம் ஆண்டுதான், பிளாஸ்டிக் மாசு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய விவகாரங்கள் குறித்து மக்கள் விழித்துக் கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் கடல்களில் 10 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். அதில் சில கழிவுகள் மட்க நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எடுக்கும்.

உலகளாவிய மோதல்கள்

2010ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று துனீசிய தெருவார கடைக்காரரான மொஹமத் புசிசி உள்ளூர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவரது காய்கறி மற்றும் பழ வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தாங்க முடியாமல் அவர் தீக்குளித்தார்.

இதுவே அரபு வசந்தம் எனும் எழுச்சி போராட்டங்களுக்கு பல வித்திட்டது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் போராட்டங்கள் வெடித்து, போருக்கு வித்திட்டன. உள்நாட்டு போர்கள் வெடித்ததால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதனை பிரதிபலிக்கும் விதமாக சிரியா, லிபியா மற்றும் இராக் நாடுகளின் அப்போதைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள் ட்வீட் செய்யப்பட்டுள்ளன.

சில நல்ல மாற்றங்களும்

கடந்த 10 ஆண்டுகளில் இந்த உலகில் ஏற்பட்டுள்ள சில நல்ல மாற்றங்களையும் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உலக வங்கி மற்றும் ஐநா-வின் புள்ளி விவரங்களின்படி, வரலாறு காணாத அளவிற்கு வறுமை நிலை குறைந்துள்ளது. குழந்தை இறப்பு குறைந்து, இளைஞர்கள் படிப்பறிவு உயர்ந்துள்ளது.

ஆனால், உலகளவில் வறுமை என்பது குறைந்திருந்தாலும், சப்-சஹாரன் ஆப்பிரிக்காவில் வறுமை நிலை உயர்ந்து வருகிறது.

அதேபோல இளைஞர்களின் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும், குறைந்தளவு முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல ஆண்களும் பெண்களும் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர். சமீபகால தரவுகள்படி, 59 சதவீத படிப்பறிவு இல்லாதவர்கள் பெண்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது முக்கிய பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனால் பல நாடுகளில் வசிக்கும் மக்களும், தங்கள் ஆற்றல் ஆதாரங்களை மாற்றி வருகின்றனர்.