வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (10:45 IST)

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாவைப் பழிவாங்குவோம்: ஹபீஸ் சயீத் மிரட்டல்

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்றும், அதற்கு இந்தியாவைப் பழிவாங்குவோம் என்றும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.
 
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நேற்று முன்தினம் தாலிபான்கள் புகுந்து 132 குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடூர சம்பவத்தை பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன.
 
பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ள்ளார்.
 
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவருமான தீவிரவாதி ஹபீஸ் சையது, தற்போது ஜமாத்-உத்-தவா என்ற மற்றொரு அமைப்பை நடத்தி வருகிறார். இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
அமெரிக்கா, இவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணையித்துள்ளது. ஆனாலும், அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருகிறார். ஹபீஸ் சயீத், அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக வெறுப்பூணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறி வருகிறார்.
 
இந்நிலையில், பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய அட்டுழியச் செயலுக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள ஹபீஸ் சயீத், இதற்காக இந்தியாவை பழி வாங்குவோம் என்று கூறியுள்ளார். ஹபீஸ் சயீத்தின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இதுவரை பாகிஸ்தானில் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.