47 வினாடிகளில் பயணம்: குறுகிய தூர விமான சேவை!!
ஸ்காட்லாந்தின் வடகிழக்குக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இரு தீவுகள் இடையே, வெறும் இரண்டு நிமிடங்களுக்குப் பறக்கும் விமான சேவை இருக்கிறது.
அதிலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பயண நேரம்தான் 2 நிமிடம். காற்று வீச்சு சாதகமாக இருந்தால், வெறும் 47 வினாடிகளில் பயணம் முடிந்துவிடும். பயண தூரம் 1.7 மைல்தான்.
கடந்த 1967-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட இவ்விமான சேவை, இன்று வரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான சேவை புகழ்பெற்றிருப்பதையும் விட, இத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு இது உயிர்நாடியாக உள்ளது என்பதுதான் முக்கியமானது.
இந்த விமான சேவை, உலகிலேயே மிகவும் குறுகிய தூர விமான சேவை என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.