பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி: தீவிரவாதிகளுள் ஒருவர் சரண்

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாகி சூட்டில் 12 பேர் பலி: தீவிரவாதிகளுள் ஒருவர் சரண்
Suresh| Last Updated: வியாழன், 8 ஜனவரி 2015 (12:23 IST)
பிரான்ஸ் நாட்டின் பத்திரிகை நிறுவனம் ஒன்றில், தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் கார்ட்டூன் பட ஓவியர்கள் கபு, டிக்னோஸ், ஓலின்ஸ்கி உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜார்லி ஹெப்டோ என்ற வார இதழ் வெளிவருகிறது. இந்த இதழில் கார்ட்டூன்கள் மற்றும் கிண்டல் கட்டுரைகள் அதிகமாக வருவதுண்டு.

கடந்த 2005ஆம் ஆண்டு டென் மார்க்கில் உள்ள ஜெய் லாண்டு பாஸ்டன் என்ற இதழில் முகமது நபி பற்றி கார்ட்டூன் சித்திரங்கள் வந்தன. அதை ஜார்லி ஹெப்டோ இதழ் வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக இந்த பத்திரிகைக்கு மிரட்டல் இருந்து வந்தது.
ஆனாலும் அந்த இதழ் 2011ஆம் ஆண்டு மீண்டும் அதுபோன்ற கேலி சித்திரங்களை வெளியிட்டது. இதனால் பத்திரிகைக்கு தொடர்ந்து மிரட்டல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் நேற்று முகமூடி அணிந்த 3 தீவிரவாதிகள் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்தனர். அப்போது பத்திரிகை செய்தி பிரிவில் வாராந்திர கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கு புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
இந்தத் தாக்குதலில், பத்திரிகை ஆசிரியர் ஸ்டீபன் சார்போனிர், கார்ட்டூன் படம் ஓவியர்கள் கபு, டிக்னோஸ், ஓலின்ஸ்கி மற்றும் 2 காவல்துறையினர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதல் முடிந்ததும் 3 தீவிரவாதிகளும் சாலைக்கு வந்து அங்கிருந்த கார் ஒன்றை கடத்தி சென்றனர். சில மைல் தூரத்தில் அந்த காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி, வேறொரு காரை கடத்திச் சென்றனர்.
பாரீஸ் நகரில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரெய்ம்ஸ் என்ற இடத்தில் இந்த கார் நின்று கொண்டிருந்தது. எனவே தீவிரவாதிகள் 3 பேரும் ரெய்ம்ஸ் நகருக்குள் பதுங்கி இருக்கலாம் என கருதி நகரம் முழுவதும் சுற்றி வளைத்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் மர்ம மனிதர்கள் புகுந்ததாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பிரான்ஸ் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரை அடையாளம் கண்டிருப்பதாக பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்கள் பெயர் சையது கவுச்சி (34), செரீப் கவுச்சி (32), ஹமீத் மொராட் (18) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சையது கவுச்சி, செரீப் கவுச்சி இருவரும் சகோதரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு செரீப் கவுச்சி, ஈராக்கில் அமெரிக்க படைகளை எதிர்த்து போரிடுவதற்காக ஆட்களை அனுப்பியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இதில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்த அவர் இந்த தாக்குதலுக்கு தலைவராக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 54 ஆண்டில் இதுபோன்ற எந்த தாக்குதலும் நடந்ததில்லை. 1961ஆம் ஆண்டு அல்ஜீரியா தீவிரவாதிகள் ரெயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இப்போதுதான் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.
இதனால் பிரான்ஸ் நாடு முழுவதும் பதட்டம் நிலவுகிறது. பாரீஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இது கலவரமாக மாறி விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரான்சு அதிபர் பிரான்கோ ஹாலண்டே நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில், நமது நாட்டில் பாரம்பரியமாக கருத்து சுதந்திரம் உள்ளது. அதன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பிரான்சு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். ஒற்றுமைதான் நமது பெரிய ஆயுதமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்க் கொடிய தாக்குதலை யொட்டி இன்று பிரான்சில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் ஹமீத் மொராட் என்ற தீவிரவாதி,
காவல்துறையினரிடம் சரண் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :