வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 25 மார்ச் 2015 (14:54 IST)

பிரான்ஸ் விமான விபத்து: தீவிரவாதிகள் தாக்குதலா? வெள்ளை மாளிகை விளக்கம்

ஆல்ப்ஸ் மலைத் தொடர் பகுதியில் விழுந்து நொறுங்கி விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரபல விமான நிறுவனம், லுப்தான்சா. இதன் துணை நிறுவனமான 'ஜெர்மனி விங்ஸ்', மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டு சென்றது. 
 
இந்நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், பார்சிலோனட் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் கூண்டோடு பலியாகி விட்டனர்.
 
விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் ஆகும். விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் கண்டறிந்தன. இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்றநிலையில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 
 
இதைத் தொடர்ந்து மீட்பு பணியை தொடங்கி நடைபெற்று வருகிறது. விமானம் விபத்துக்குள் காரணத்தை அறிய உதவும், கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மலையில் 6000 அடி உயரத்தில் விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கிறது. இச்சம்பவத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன. இது குறித்து பிரான்ஸ் விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த விபத்து நடந்ததற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாக தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே விமானம் விழுந்தது, தீவிரவாத தாக்குதல் போன்று காணப்படவில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.