லைக் செய்ய, புக்மார்க் செய்ய, ரிப்ளை செய்ய காசு.. ‘எக்ஸ்’ தளத்தில் எலான் மஸ்க் அதிரடி..!
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த சில வருடங்களுக்கு முன் ட்விட்டர் என்ற இணையதளத்தை வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றினார் என்பதும் தற்போது இந்த சமூக வலைதளத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
அதுமட்டுமின்றி வெரிஃபைடு பயனாளிகளுக்கு வருமானத்தின் சில பகுதிகளையும் பகிர்ந்து கொடுக்கிறார் என்பதும் இதனால் பல பயனாளிகள் தற்போது ட்விட்டர் எக்ஸ் தளத்தின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அதிரடியாக சில மாற்றங்களை மஸ்க் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இனிமேல் எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட, மற்றவர்களின் பதிவுகளுக்கு பதிலளிக்க, லைக் செய்ய, புக் மார்க் செய்ய கட்டணம் வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தாலும் காசு சம்பாதிப்பது ஒன்றே அவரது குறிக்கோளாக உள்ளது என்ற கருத்தும் பரவி வருகிறது.
முதல் கட்டமாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த முறை நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் உலகம் முழுவதும் இந்த கட்டணம் வசூல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva