1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 30 மே 2015 (17:35 IST)

பின் விளைவுகள் என்னவென்று மருத்துவர்களுக்கே தெரியவில்லையாம்

மருந்துகள் ஏற்படுத்தும் பின் விளைவுகள் குறித்து பெரும்பாலான மருத்துவர்களுக்கே தெரியவில்லை என்று பத்திரிக்கை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
 
ஒரு மருந்தை கண்டுபிடித்து தயாரிக்கும் போதே அதை பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். பின்னர் அது என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்து அதுபற்றி தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.
 

 
அதன் பிறகுதான் மருந்துகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த மருந்துகள் என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்து அதன்படி மருத்துவர்கள் மருந்துகளை கொடுக்க வேண்டும். ஆனால், மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் எது என்று தெரியாமலே பெரும்பாலான மருத்துவர்கள் மருந்து எழுதி கொடுப்பது தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பாக சர்வதேச மருந்து மற்றும் உயிரியல் விஞ்ஞான பத்திரிகை ஒன்று சமீபத்தில் மருத்துவர்களிடம் ஆய்வு நடத்தியது. சென்னையில் இந்த பத்திரிகை 125 மருத்துவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 60 விழுக்காடு மருத்துவர்களுக்கு மருந்தின் பக்க விளைவுகள் பற்றி தெரியவில்லை என்று தெரிய வந்தது.
 
அதே போல பெரும்பாலான நர்சுகளுக்கும் பக்க விளைவுகள் பற்றி தெரியவில்லை.மருந்துகளின் பக்க விளைவுகளை கண்காணிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியாவில் 90 மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 மையங்கள் செயல்படுகின்றன. மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றி மருத்துவர்கள் இந்த மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
 
ஆனால், இந்த மையத்தின் செயல்பாடுகள் பற்றிகூட 39 விழுக்காடு மருத்துவர்களுக்கு தெரியவில்லை.பொதுவாக மருந்துகள் பக்க விளைவுகளை உடனே வெளிக்காட்டுவதில்லை. மருந்து சாப்பிட்டு பல காலத்துக்கு பிறகுதான் வெளியே தெரிய வருகிறது. சில மருந்துகளை சாப்பிட்டு பாதியில் விட்டு விட்டால் அது வேறு மாதிரியான மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு.
 
பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே தெரிந்து அதை தடுக்க மருத்துவர்கள் வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். ஆனால் அது தெரியாமலே மருந்து எழுதி கொடுப்பதோடு தங்கள் வேலை முடிந்து விடுகிறது என்று விட்டுவிடுகின்றனர்.
 
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 16.2 விழுக்காடு பேர் மருந்துகளின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சில மருந்துகள் பக்க விளைவுகள் மூலம் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன.