வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (13:49 IST)

லிபியாவிலிருந்து 80 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர் - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

லிபியாவிலிருந்து முதற்கட்டமாக 80 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011 இல் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளால் அங்கு மோசமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போராளிக் குழுக்களை கட்டுப்படுத்த முடியாமல் அரசுப் படைகள் திணறி வருகின்றன.

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள  விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக போராளிகள் குழுவினரிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, அந்நாட்டின் தலைநகரான திரிபோலியில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டின் தூதரகத்தை தற்காலிகமாக மூடி விட்டு அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து ஐ.நா அமைப்பும், துருக்கியும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுள்ளன. அங்கு நடைபெற்று வரும் மோதலில் தலைநகர் திரிபோலி அமைதி இழந்து காணப்படுகிறது

லிபியாவில் 6000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிலைமை குறித்து கவலை கொண்டுள்ள லிபியாவில் உள்ள இந்திய தூதரகம், உச்சகட்ட மோதல் நடந்து வரும் திரிபோலி மற்றும் பென்காசி பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், அங்கு நிலைமை சீரடையும் வரை இந்தியாவுக்கு திரும்பி சென்று விடும்படியும் அவர்களை அறிவுறுத்தியது.

லிபிய தலைநகர் திரிபோலியில் சிக்கியுள்ள கேரள நர்சுகள் 120 பேரை மீட்க உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டியும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் லிபியாவில் இருந்து முதற்கட்டமாக 80 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் பெரும்பாலானவர்கள் செவிலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லிபியா, முதற்கட்டமாக 80 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.