வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (08:58 IST)

பஞ்சன் லாமாவை நாங்க கடத்தல.. அவர் நிம்மதியா வாழ்றார்! – சீனா விளக்கம்!

Panchen Lama
தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பஞ்சன் லாமாவை தாங்கள் கடத்தவில்லை என சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

திபேத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பஞ்சன் லாமா. இந்த பஞ்சன் லாமாவை தலைமை குருவான தலாய் லாமாதான் தேர்ந்தெடுப்பார்.
அப்படியாக கடந்த 1995ம் ஆண்டு பஞ்சன் லாமாவாக 5 வயது சிறுவனை தேர்ந்தெடுத்தார் தலாய் லாமா. ஆனால் பஞ்சன் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த சிறுவன் சில நாட்களுக்குள் குடும்பத்தோடு மாயமானான்.

சிறுவனை குடும்பத்தோடு சீனாதான் கடத்திவிட்டதாக திபேத்திய மக்கள் இன்றளவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சன் லாமாவாக தேர்வு செய்யப்பட்ட சிறுவனின் 33வது பிறந்தநாளில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகம் “சீன அதிகாரிகளால் 6 வயதில் கடத்தப்பட்ட பஞ்சன் லாமாவை திபெத்திய சமூகம் அணுகுவதற்கு சீனா தொடர்ந்து மறுக்கிறது. நைமாவின் இருப்பிடம் மற்றும் நல்வாழ்வை பொதுவெளியில் உறுதி செய்யுமாறு சீன அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிக்கையை சீனா கண்டித்துள்ளது. இதுகுறித்து சீனா அளித்துள்ள பதிலில் “நைமா ஒரு சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை. எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இழிவான அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.