கட்டுக்குள் வந்த கொரோனா, சீனா பெருமிதம்! உலக நாடுகளில் நிலையோ..?
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் அந்நாட்டில் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கிய சீனாவில் நோய் பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். ஆனால், சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலியில் 1,016 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல அமெரிக்காவின் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொரானா வைரஸால் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி உலக நாடுகளுக்கு பீதியை கிளப்பிவிட்டு தற்போது தங்களது நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர சீனா அதீத அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.