வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 நவம்பர் 2014 (17:09 IST)

செயற்கைத் தீவு குறித்த அமெரிக்காவின் கருத்திற்கு சீனா பதிலடி

'மதிப்பற்ற கருத்துக்களை கூறுவதற்கு அந்நிய சக்திகளுக்கு உரிமையில்லை' என்று செயற்கைத் தீவு குறித்த அமெரிக்கக் கருத்திற்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது.
 
நான்சா என்றழைக்கப்படும் தீவிற்கு அருகே புதிய செயற்கைத் தீவு ஒன்றை சீனா அமைத்து வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளில் புருனே, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றது. 
 
சமீபத்தில், இந்த தீவுகளில் விமான ஓடுதளங்கள், துறைமுகங்கள் அமைக்கும் விதமாக சீனா மிகப்பெரிய தீவை உருவாக்கி வருவது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்களை அமெரிக்கா  வெளியிட்டது. 
 
இந்நிலையில், சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா மற்றும் பிற நாடுகள் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது. 
 
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'தென் சீனக் கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடும்' என்று கூறினார்.
 
ஆனால் சீனா, செயற்கைத் தீவு விவகாரம் குறித்த அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
 
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுப் பேசுகையில், "மதிப்பற்ற கருத்துக்களை கூறுவதற்கு அந்நிய சக்திகளுக்கு உரிமையில்லை. ஊழியர்களின் வாழ்நிலைகளையும், வேலைத் திட்டத்தை மேம்படுத்துவதற்காகத் தான் சீனா செயற்கைத் தீவு கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகையால், அமெரிக்கா அதனுடைய உள்நாட்டுப் பணிகளையும், தேவைகளையும் பார்த்துக் கொள்வது நல்லது" என்றார்.