வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (13:35 IST)

டிரம்புடன் விளையாட வேண்டாம்: வட கொரிய தலைவருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அதிபர் டிரம்புடன் விளையாட வேண்டாம் என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.
 
அடுத்த மாதம் அதிபர் டிரம்பை சந்திக்கும் போது, அவரை வைத்து விளையாடலாம் என்று கிம் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு என ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் கூறியுள்ளார்.
 
அப்படி ஏதேனும் நடந்தால், ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதிபர் டிரம்ப் பொது உறவுகள் பற்றி சிந்திக்கவில்லை, அவர் சமாதானத்தை பற்றியே நினைக்கிறார் என்று மைக் கூறினார். முன்னதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறிய சில கருத்துகளால், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் போகலாம் என்று வட கொரியா எச்சரித்திருந்தது.
 
வட கொரியாவில் "லிபியா மாதிரி" போன்ற ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.
 
இந்நிலையில், உச்சிமாநாடு குறித்து கலந்தாலோசிக்க, அதிபர் டிரம்பை, தென் கொரியத் தலைவர் மூன் ஜே-இன் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.