வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 1 நவம்பர் 2014 (12:42 IST)

அமெரிக்க உளவு அமைப்புகள் சென்ற ஆண்டு செலவிட்ட தொகை ரூ.4 லட்சம் கோடி

2013-2014 நிதி ஆண்டில் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.08 லட்சம் கோடி என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவில் 17 உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில உள்நாட்டில் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
 
சில அமைப்புகள் வெளிநாடுகளில் மட்டும் உளவுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளுக்காக அந்நாட்டு அரசு செலவிட்ட மொத்த தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
 
2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரையிலான கால அளவில், உளவு அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
 
இதில் சிஐஏ அமைப்பு மட்டுமே 50.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ. 3.03 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. ராணுவ ரீதியான உளவுத் தகவல் சேகரிப்புத் திட்டங்களுக்கு 17.4 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில், சுமார் ரூ. 1,04,400 கோடி செலவிடப்பட்டது.
 
அதற்கு முந்தைய 2012-2013 நிதி ஆண்டின்போதும், உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை சுமார் 68 பில்லியன் டாலராகும். சுமார் ரூ. 4,08,000 கோடி. ஆயினும், அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கீடு செய்த தொகை அதைவிட மிகக் கூடுதலாக இருந்தது.
 
அரசின் செலவுக் குறைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, பல லட்சம் கோடி மதிப்பில் உளவு அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்னர் குறைக்கப்பட்டது.
 
அமைப்புவாரியாகவும் பயன்பாட்டு வாரியாகவும் விரிவான செலவு விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 
2010-2011 நிதி ஆண்டின்போது, அமெரிக்க உளவு அமைப்புகள் 80 பில்லியன் டாலர் அதாவது, சுமார் 4,80,000 கோடி செலவிட்டன என்பது குறிப்பிடத் தகுந்தது.