பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பது தவறு - சவுதி இளவரசரை எச்சரிக்கும் அல்கொய்தா
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆண்கள் அனுமதி இல்லாமல் இனி சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் என சவுதி அரசு தெரிவித்தது. அதேபோல் பெண்கள் கார் ஓட்டவும் அனுமதித்துள்ளது.
கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவுக்கு அனுமதி வழங்கயுள்ளது சவுதி அரசு. சில வருடங்களில் பெண்களுக்கு பர்தா கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் ''பொழுதுபோக்கு நகரம்'' ஒன்றை உருவாக்க இருக்கிறார். இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அல்கொய்தா, சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.