வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (14:56 IST)

போராடும் இளைஞர்களின் உணவு தேவைக்கு ரூ.1 கோடி - நடிகர் ராகவா லாரன்ஸின் மனித நேயம்

ஜல்லிக்கட்டிற்காக நாடெங்கும் போராடும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உணவு, தண்ணீர், சுகாதாரம் போன்ற வசதிகளுக்கு தான் உதவ தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், கோவை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு கருணாஸ், மயில்சாமி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்று காலை நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினாவிற்கு சென்று மாணவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். உடல் நிலை சரியில்லாத வேளையிலும் அவர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஜல்லிக்கட்டிற்காக பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். இதிலேயே நமக்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது. அப்படி போராடுபவர்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவ வசதி ஆகியவை கிடைக்கவில்லை என அறிந்தேன். எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர முடிவெடுத்துள்ளேன். அதற்கு ஒரு கோடி செலவானாலும் பரவாயில்லை. 
 
இதேபோல் பல ஊர்களில் போராடுபவர்களுக்கு மற்றவர்கள் உதவ முன் வரவேண்டும். மாணவர்கள் என்றால் வன்முறையில் ஈடுபடுபவர்கள், ஊர் சுற்றுபவர்கள் என கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது பொய் என நிரூபித்து, அமைதியான வழியில் அவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்” என அவர் கூறினார்.