வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (17:33 IST)

திரும்பி வர முடியாத செவ்வாய் கிரகப் பயனம் - 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஒருவழி பயணத்துக்கான 100 பேர் கொண்ட பட்டியலில் 3 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக மனிதர்களை குடியமர்த்த திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்கு திரும்ப இயலாது அதற்கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்யவில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப்பங்களை விநியோகித்தது.

 
50 பேர் ஆண்கள், 50 பேர் பெண்களை கொண்ட இந்தப் பயணத் திட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து வடிகட்டி தற்போது 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
இதில், அமெரிக்காவிலிருந்து 39, ஐரோப்பாவிலிருந்து 31, ஆசியாவிலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானியாவிலிருந்து 7 நபர்களும் தேர்வாகியுள்ளனர். இந்த பயணப் பட்டியலில் 3 இந்தியர்களும் தேர்வாகியுள்ளனர்.
 
27 ஆண்கள், 17 பெண்கள் உட்பட 44 பேரின் விண்ணப்பத்தில் இருந்து இந்த 3 பேரும் தேர்வாகியுள்ளனர். கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வாகி உள்ளனர். 
 
இந்த 100 பேரில் இருந்து 40 பேர் செவ்வாயில் நிரந்தரமாக தங்க தேர்வு செய்யப்படுவார்கள். செவ்வாயில் வசிப்பதற்கு அவர்களுக்கு 7 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 2024ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கான பயணம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.