வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:00 IST)

உலக சினிமா - த சாங் ஆஃப் ஸ்பேரோவ்ஸ்

உலக சினிமா - த சாங் ஆஃப் ஸ்பேரோவ்ஸ்

ஈரானிய சினிமாவை உலகறியச் செய்தவர்களில் முக்கியமானவர் மஜீத் மஜ்ஜித். அவர் இயக்கத்தில் வெளிவந்து பாராட்டுகளை பெற்ற படம், சாங் ஆஃப் ஸ்பேரோவ்ஸ்.


 
கரீம் என்கிற குடும்பத்தலைவரை சுற்றி நடக்கும் கதையிது. கரீம் நெருப்புக்கோழிப் பண்ணையில் வேலை பார்ப்பவர். அவரது மூத்த மகளின் காது கேட்கும் கருவி கிணற்றில் விழுந்து பழுதடையும். இன்னொரு கருவி வாங்க கரீமிடம் பணம் இருக்காது. இந்நிலையில், ஒரு நெருப்புக்கோழி பண்ணையிலிருந்து தப்பித்துப் போக, அவரது வேலையும் பறிபோகும்.
 
இந்த நெருக்கடியான சூழல் கரீமை எப்படி சுயநலவாதியாக மாற்றுகிறது... அவர் எப்படி தனது பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார் என்பதை படம் கவித்துவமாக சொல்கிறது.
 
மஜீத் மஜ்ஜித்தின் அனைத்துப் படங்களையும் போல மனதுக்கு நெருக்கமான எளிமையான காட்சிகளால் இந்தப் படம் பின்னப்பட்டுள்ளது. கரீமின் மகனுக்கு அழுக்கடைந்த கிணறை சரி செய்து அதில் மீன்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், கரீமுக்கு அதில் உடன்பாடில்லை, வெட்டிவேலை என்று அவர் நினைக்கிறார். ஆனால், அந்த சின்ன பையனும், அவனது நண்பர்களும் அந்த அழுக்கடைந்த கிணற்றை பறவைகள் வந்து தங்கும் அற்புதமான இடமாக மாற்றுகிறார்கள். 
 
எளிய செயல்களின் மூலமே ஒரு சிறந்த விஷயத்தை உருவாக்க முடியும் என்பதை இந்தக் காட்சி சொல்கிறது. இதேபோல் படம் நெடுக பல விஷயங்களை நெகிழ்வுடன் சொல்லிச் செல்கிறது படம்.
 
மஜீத் மஜ்ஜித்தின் படங்களில் வரும் மனிதர்கள் எளிமையானவர்கள், கஷ்டப்படுகிறவர்கள். ஆனால், அவர்களை தீராக்கஷ்டத்தில் ஆழ்த்தி ரசிகர்களின் பச்சாதாபத்தை அவர் கறப்பதில்லை. இந்தப் படத்திலும், கரீம் தனது பழைய குணஇயல்புகளை திரும்பப் பெறுகிறார். முக்கியமாக, அந்த நெருப்புக்கோழி கிடைத்துவிடுவதால் அவருக்கு வேலையும் திரும்பக் கிடைக்கிறது.
 
பிற மஜீத் மஜ்ஜித்த்தின் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் குழந்தைகள் குழந்தைகளாகவே நடித்துள்ளனர். 
 
அவர்களுடனான கரீமின் உரையாடலும், நிகழ்வுகளும் நம்மை புன்னகை செய்ய வைப்பவை.
 
அனைவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படைப்பு, த சாங் ஆஃப் ஸ்பேரோவ்ஸ்.