வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 16 ஜூலை 2014 (20:33 IST)

உலக சினிமா - Purge

பர்ஜ் 2012-ல் வெளியான பின்லாந்த் - எஸ்தோனியா திரைப்படம். இதே பெயரில் எழுத்தாளர் ஸோஃபி ஒக்ஸானன் (Sofi Oksanen) 2008 -ல் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. நாவல் 38 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றது.
படத்தின் கதை 1992-ல் ஆரம்பமாகிறது. இளம் பெண் ஸாரா எஸ்தோனியாவின் தலைநகர் தல்லினில் (Tallinn) ரஷ்ய மாஃபியா கும்பலால் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறாள். மாஃபியாவின் பிடியிலிருந்து மீள்வது கடினம். தனது கஸ்டமர் ஒருவரை கொலை செய்துவிட்டு ஸாரா அங்கிருந்து தப்பித்து எஸ்தோனியாவின் ஒதுக்குப்புறமான பகுதி ஒன்றுக்கு வருகிறாள். அவளிடம் அவளது பாட்டியின் (அம்மாவின் அம்மா) புகைப்படம் மட்டும் உள்ளது. அதில் அவளது பாட்டியின் சகோதரியின் பெயர் - அலிடி (Aliide) - என்று எழுதப்பட்டுள்ளது.
 
அலிடி வயதானவள். இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு முன் மயங்கி விழுந்து கிடக்கும் ஸாராவுக்கு தேவையான உதவிகள் செய்கிறாள். ஆனால் ஸாராவின் பாட்டி தனது சகோதரி என்பதை அவள் ஒத்துக் கொள்வதாயில்லை. ஸாராவைத் தேடி மாஃபியா கும்பல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதால் அவளை அறையினுள் தூங்க வைத்து கையில் விறகு வெட்டும் கோடாலியுடன் கதவுக்கு வெளியே அலிடி காவலிருக்கிறாள். அவளுடைய நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன.

பர்ஜ் திரைப்படத்தின் இயக்குனர் ஆன்டி ஜோ‌க்கினன் (Antti Jokinen) பர்ஜ் நாவலின் இரு பெண் கதாபாத்திரங்கள் தன்னை பாதித்ததால் அதனை திரைப்படமாக எடுத்ததாக பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்தத் திரைப்படத்தை புரிந்து கொள்ள எஸ்தோனியாவின் அரசியல் குறித்து சிறிது அறிந்திருப்பது அவசியம்.
பால்டிக் ஸ்டேட்ஸ் (Baltic States) எனப்படும் மூன்று நாடுகளில் ஒன்று எஸ்தோனியா (Estonia). மற்ற இரண்டு லாத்வியா (Latvia), லிதுயானியா (Lithuania). இரண்டாம் உலகப் போரின் போது அன்றைய சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்த எஸ்தோனியா ஜெர்மனியின் நாஜிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1941 முதல் 1944 வரை நாஜிக்கள் எஸ்தோனியாவின் மீது ஆதிக்கம் செலுத்தினர். போர் முடிந்த பிறகு மீண்டும் சோவியத் யூனியனின் அதிகாரத்தின் கீழ் எஸ்தோனியா வந்தது. 1944 முதல் 1950 வரை ஸ்டானிலிஸம் வன்முறையின் வழியாக எஸ்தோனியாவில் கட்டாயமாக திணிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாடு கடத்தப்பட்டனர்.
அலிடியின் இளமைக்கால கதை இந்தப் பின்னணியில் தொடங்குகிறது. அலிடி ஹன்ஸ் என்பவனை விரும்புகிறாள். ஆனால் அவளுக்கு அலிடியின் சகோதரி இங்கலை பிடித்திருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஹன்ஸ் மீதான அலிடியின் அபிரிதமான காதல் இதனால் மாறிவிடவில்லை.

ஹன்ஸ் செம்படைக்கு எதிராக நண்பர்களுடன் நடத்தும் தாக்குதல் அவனை கம்யூனிஸ்டுகளின் எதிரியாக்குகிறது. அவனது நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள். ஹன்ஸை அலிடி வீட்டிற்கு கீழே நிலவறையொன்றை அமைத்து ஒளித்து வைக்கிறாள்.

ராணுவ அதிகாரிகள் அலிடி, இங்கலின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து ஹன்ஸ் குறித்து விசாரிக்கின்றனர். கம்யூனிஸ அனுதாபியாக இருந்தாலும் அலிடி ஹன்ஸின் பொருட்டு ராணுவ அதிகாரிகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறாள். கும்பலாக அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். ஹன்ஸ் மீதான காதலால் அனைத்தையும் அலிடி தாங்கிக் கொள்கிறாள். தானொரு கம்யூனிஸ்ட், கம்யூனிஸத்தை எதிர்க்கும் ஹன்ஸை அவள் காப்பாற்றவில்லை என்பதை நிரூபிக்க ஹன்ஸ் - இங்கலின் பத்து வயது மகளை பாலியல் சித்திரவதை செய்யவும் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். ஹன்ஸின் பாதுகாப்புக்காக ரஷ்ய அதிகாரி ஒருவரையே அலிடி காதலித்து மணந்து கொள்கிறாள். ஆனால் அவளின் அனைத்து நோக்கங்களும் தியாகங்களும் நிலவறையில் எலியைப் போல வசிக்கும் ஹன்ஸை காப்பாற்றுவதற்காகவே இருக்கிறது.
இளமையில் சோவியத் யூனியனின் செம்படையிடமிருந்து நிலவறையில் ஒளிந்திருந்த ஹன்ஸை காப்பாற்ற போராடிய அலிடி 1992-ல் விடுதலை பெற்ற எஸ்தோனியாவில் (எஸ்தோனியா 1991-ல் விடுதலை பெற்றது) தனது காதலனின் பேத்தியை காப்பாற்ற கையில் கோடாலியுடன் காவலிருக்கிறாள். அன்று செம்படை என்றால் இன்று ரஷ்ய மாஃபியா கும்பல். இரண்டு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை ஒரேபோல்தான் உள்ளது.

பர்ஜ் ஃபீல்குட் படம் கிடையாது. மனதை அலைக்கழிக்கக் கூடியது. ஸ்டானிலிஸம் மனிதர்களின் மீது செலுத்திய வன்முறை அலிடி என்ற பெண் கதாபாத்திரம் வழியாக முன் வைக்கப்படுகிறது. போர் முதலான எந்த வன்முறையின் போதும் முதலில் குறி வைக்கப்படுவதும் சிதைக்கப்படுவதும் பெண் உடம்பாகவே இருக்கிறது. அலிடி கதாபாத்திரம் அரசியல் பாதிப்புக்குள்ளாகும் கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் அபிரிதமான காதலுடைய கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் அதற்கு ஒரு தனித்தன்மையும் கிடைத்துவிடுகிறது.
இளமையான அலிடி கதாபாத்திரத்தில் Laura Birn -ம் வயதான அலிடியாக Liisi Tandefelt -ம் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆதாரமே இவ்விரு நடிகைகளின் நடிப்புதான். அலிடி கதாபாத்திரத்தை தங்களின் நடிப்பின் மூலம் உயிரூட்டியுள்ளனர் இருவரும். கதையின் இறுக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஸ்டாலினிஸ வன்முறை ஒருதலைபட்சமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக நாவல் மீதும், திரைப்படம மீதும் விமர்சனம் உள்ளது.
போர் பின்னணியில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை அதிகமும் ஆண்களின் பார்வையில் சொல்லப்பட்டவை. பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்திய படங்கள் குறைவு. அதில் பர்ஜ் முக்கியமானது.