வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 11 ஜூன் 2016 (12:40 IST)

உலக சினிமா - Lost in the Sun

உலக சினிமா - Lost in the Sun

தந்தை - மகன் உறவை சொல்லும் திரைப்படங்கள் அரிதாகவே வெளியாகின்றன. 2015 -இல் வெளியான ஆங்கில திரைப்படம், லாஸ்ட் இன் த சன் அப்பா - மகன் உறவை முற்றிலும் வேறான கோணத்தில் சொல்கிறது.


 
 
பிள்ளைகள் மீது தீராத பாசம் கொண்டு அவர்களுக்காக எதையும் செய்யும் தந்தைகளின் கதைகள் தமிழில் உள்ளன. அந்த தந்தைகளை பார்த்ததும் நம்முள் இரக்கம் சுரக்கும். அவ்வாறு இல்லாத தந்தைகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்தாத தந்தைகள். அக்கறை இருந்தும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான சூழலும், குணாம்சமும் இல்லாதவர்கள். அப்படிப்பட்ட ஒரு தந்தையை ட்ரே நெல்சனின் இத்திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.
 
லூயிஸ் என்ற 14 வயது சிறுவனின் தாய் இறந்து போகிறாள். அவளது இறுதிச்சடங்கில் அந்தியமான ஒரு நடுத்தர மனிதனும் கலந்து கொள்கிறான். கசங்கிய அழுக்கடைந்த உடைகளுடன் ஒரு கௌபாயைப் போலிருக்கிறது அவனது தோற்றம்.
 
சிறுவனுக்கு அம்மாவை தவிர யாருமில்லை. வெகுதொலைவில் நியூ மெக்சிகோவில் அவனது அம்மாவின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவனை பார்த்துக் கொள்வதாக வாக்களித்துள்ளதால், கோவில் பாதிரியார் பேருந்தில் சிறுவனை வழியனுப்பி வைக்கிறார். சிறுவனுக்கோ, பேருந்து பயணத்தில் விருப்பமில்லை. அதுவும் மூன்று தினங்கள். அவனை கவனித்துக் கொண்டிருக்கும் கௌபாய் - ஜான், தனது காரில் அவனை அவனது தாத்தா, பாட்டியின் வீட்டில் சேர்ப்பதாக கூறுகிறான். அவர்கள் சொல்லியே அவன் வந்ததாகவும் தெரிவிக்கிறான். ஆரம்ப தயக்கத்துக்கு பின் சிறுவன் ஜானுடன் பயணத்தை தொடர்கிறான்.
 
நியூ மெக்சிகோவை நோக்கிய அவர்களின் பயணம்தான் கதை.
 
சிறுவனுடனான ஜானின் உறவு இணக்கமாக இல்லை. சிறுவனின் செலவுக்கான பணத்தை எடுத்துக் கொள்கிறான். உள்ளூர் தாதா ஒருவனுக்கு அவன் பணம் தர வேண்டியிருக்கிறது. மொத்த பணத்தையும் அவனுக்கு தந்த பிறகு செலவுக்கு கடைகளில் கொள்ளையடிக்கிறான். வழியில் சிறுவனுக்கு கார் ஓட்டவும், துப்பாக்கி சுடவும் கற்றுத் தருகிறான். சுவாரஸியமாக நடக்கும் இந்தப் பயிற்சி மெதுவாக, ஜானின் கொள்ளையில் சிறுவனையும் ஒரு கூட்டாளியாக மாற்றுகிறது. 
 
படத்தின் ஓட்டத்திலேயே சிறுவனின் தந்தை ஜான் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. சிறுவயதிலேயே குற்றத்தின் நிழலில் ஓடிக் கொண்டிருக்கும் ஜானும் ஒரு தந்தையாக சிறுவனின் மனதில் ஓர் இடத்தை பயணத்தின் முடிவில் பிடித்துக் கொள்கிறான். சராசரியான இந்தப் படம் ஓரளவு முக்கியம் பெறுகிறது என்றால் அது இந்தப் புள்ளியில்தான்.
 
தியாகியாக பிள்ளைகளுக்கு தனது வாழ்வை தாரைவார்க்கும் தந்தைகளைப் போவே சுயநலமிக்க தந்தைகளுக்குள்ளும் பிள்ளைகள் மீதான கரிசனம் மனதின் அடியாழத்தில் அலையடிக்கிறது. லாஸ்ட் இன் த சன் அந்த அலையை நமக்கு உணர வைக்கிறது.