வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (13:14 IST)

உலக சினிமா - Headhunters

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், ஒவ்வொரு பதவிக்கும் தகுதியான நபர்களை கண்டறிந்து தேர்வு செய்வதற்கென்றே சிலர் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.


 


அவர்களின் பெயர், ஹெட்ஹன்டர்ஸ். அப்படியொரு பணியில் இருப்பவன் ரோஜர் ப்ரௌன். அவனது மனைவி டயானா. மனைவியின் மீது ரோஜர் ப்ரௌவுனுக்கு அளவுகடந்த காதல். டயானா தன்னைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். மனைவியின் ஆடம்பர வாழ்க்கைக்காக இன்னொரு தொழிலையும் ரகசியமாக செய்து வருகிறான். அது திருட்டு. விலையுயர்ந்த ஓவியங்கள் யார் வீட்டில் உள்ளன என்பதை கண்டறிந்து, அவர்கள் இல்லாத நேரத்தில் ஓவியத்தை திருடி விற்பது. அவனது தொழில் கூட்டாளி ஓவே.
 
அழகான மனைவி, அவ்வப்போது திருட்டு என்று போய்க் கொண்டிருக்கும் ரோஜரின் வாழ்க்கையில், டயானா மூலமாக கிளாஸ் க்ரீவ் என்பவன் அறிமுகமாகிறான். அவனது இறந்து போன பாட்டியின் பழமையான வீட்டை புதுப்பிப்பதற்காக டென்மார்க்கிலிருந்து வந்திருக்கிறான் கிளாஸ். அவனது பாட்டியின் வீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஓவியம் ஒன்று இருக்கிறது. எப்படியாவது அந்த ஓவியத்தை திருட முடிவு செய்கிறான் ரோஜர்.
 
கிளாஸின் பின்னணி தனது கம்பெனியின் சிஇஓ பணிக்கு ஏற்றதாக இருப்பதால், அவனை நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்கிறான் ரோஜர். அவன் நேர்முகத் தேர்வுக்கு வரும் நேரம் கிளாஸின் பாட்டியின் வீட்டிலிருக்கும் ஓவியத்தை திருடுவது ரோஜரின் திட்டம். ஆனால், அது ரோஜருக்கு வைத்த கண்ணி என்பது அவனுக்கு தெரியாது. அந்தத் திருட்டு அவனை வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓட வைக்கிறது. கிளாஸ் யார்? அவன் ஏன் ரோஜரை பின் தொடர வேண்டும்? இந்த இக்கட்டிலிருந்து ரோஜரால் மீள முடிந்ததா?
 
திருட்டு சார்ந்த படங்களுக்கு எப்போதுமே ஒரு சுவாரஸியம் உண்டு. ஹெட்ஹன்டர்ஸ் திரைப்படமும் அப்படியான சுவாரஸியத்துடன் தொடங்குகிறது. ஒரு திருட்டை செயல்படுத்தும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பின்னணியில் ஒலிக்க, ரோஜர் ஓவியம் திருடும் காட்சி காட்டப்படுகிறது. இந்த முதல் காட்சி, படத்தின் கதை ஓவியத் திருட்டை மையப்படுத்தியது என்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது. படத்தின் இறுதியில், கிளாஸ் யார், அவனது நோக்கம் என்ன என்பது தெரிய வருகையில் அது நாம் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்து படத்தின் சுவாரஸியத்தை கூட்டுகிறது.
 
ஹெட்ஹன்டர்ஸின் சிறப்பான அம்சம், மைய கதைக்கு இணையாக வரும் துணை கதாபாத்திரங்கள். ரோஜருக்கு அவனது மனைவி மீது இருக்கும் காதல், விசாரணை அதிகாரி, ஓவே ஒருநாள் முன்பே இறந்து போனதை மறைத்து வழக்கை முடிப்பது எல்லாம் படத்திற்கு செழுமை சேர்க்கிறது.
 
ஹெட்ஹன்டர்ஸ் திரைப்படம் நார்வே எழுத்தாளர் Jo Nesbo இதே பெயரில் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் மார்டன் டில்டம். இந்த வருடம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற த இமிட்டேஷன் கேம் படத்தை இயக்கியவர்.
 
க்ரைம் த்ரில்லர் ரசிகர்களை ஹெட்ஹன்டர்ஸ் ஏமாற்றாது.