வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே‌பிஆ‌ர்
Last Updated : புதன், 18 ஜூன் 2014 (18:37 IST)

உலக சினிமா - Big Bad Wolves

சென்ற வருடம் வெளியான இஸ்ரேலிய திரைப்படம் பிக் பேட் வூல்வ்ஸ். Aharon Keshales, Navot Papushado  இருவரும் இணைந்து படத்தை இயக்கியிருந்தனர். இதுவொரு த்ரில்லர்.
மூன்று குழந்தைகள் கண்ணாமூச்சி ஆடுவதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த மூன்று பேரில் ஒரு சிறுமி காணாமல் போகிறாள். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து தனிமையான இடத்தில் மிக்கி என்ற போலீஸ்காரரின் தலைமையில் அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கைது செய்யப்பட்டவர் பறாதாபமாக மறுக்கிறார். போலீஸ்காரர்கள் அவரை அடித்து சித்திரவதை செய்வதை ஒரு சிறுவன் யாருக்கும் தெரியாமல் தனது போனில் பதிவு செய்கிறான். மேலதிகாரியின் உத்தரவுபடி கைது செய்த நபரை அவரது வீட்டருகே விட்டு விடுகிறார்கள். 
 
போலீஸ்காரர்கள் சித்திரவதை செய்யும் வீடியோ யூ டியூபில் வெளியாகிறது. போலீஸ்காரர்களிடம் அடிவாங்கும் நபர் ஒரு ஆசிரியர். அவர் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றேnர்கள் அவரை பள்ளியிலிருந்து நீக்கும்படி வற்புறுத்த, தற்காலிகமாக அவர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். 
அதேநேரம் யூ டியூபில் வெளியான வீடியோ காரணமாக மிக்கிக்கு போலீஸ் டிபார்ட்மெண்டில் சிக்கல் உருவாகிறது. எப்படியாவது அந்த ஆசிரியர்தான் சிறுமி காணாமல் போனதற்கு காரணம் என்பதை நிரூபித்தால் மட்டுமே மிக்கியால் நெருக்கடியிலிருந்து மீள முடியும். மிக்கி ஆசிரியரை ஃபாலோ செய்ய ஆரம்பிக்கிறார்.
 

ஒரு அனாமதேய போன்கால் சிறுமி எங்கிருக்கிறாள் என்ற தகவலை தெரிவிக்கிறது. மரங்கள் சூழ்ந்த இடத்தில் நாற்காலி ஒன்றில் சிறுமி கட்டப்பட்டிருக்கிறாள். சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அவளது உடலில் இருக்கின்றன. ஆனால் உடலில் அவளது தலை மட்டும் இல்லை. 
சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறார்கள். இதனை ஒரு சைக்கோ சீரியல் கில்லர் தொடர்ந்து செய்து வருகிறான். சிறுமிகளின் உடல் கிடைக்கும், ஆனால் தலை மட்டும் கிடைப்பதில்லை. யூதர்களின் மத நம்பிக்கையின்படி ஒரு நபர் பிறக்கும் போது எந்தெந்த அவயங்களுடன் இருந்தாரோ அதேபோல்தான் புதைக்கப்பட வேண்டும். தலையில்லாமல் சிறுமிகளை புதைப்பது சிறுமிகளை இழந்த பெற்றோர்களுக்கு கூடுதல் சோகத்தை தரக்கூடியது.
 
மிக்கி எப்படியாவது ஆசிரியரை கடத்திச் சென்று உண்மையை அறிய நினைக்கிறார். கிடி என்ற நபரும் (கண்ணாமூச்சி ஆடும்போது காணாமல் போய் தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தந்தை) ஆசிரியரை கடத்திச் சென்று விசாரிக்க முயல்கிறார். மிக்கி முந்திக் கொள்ள கிடி மிக்கி, ஆசிரியர் இருவரையும் கடத்துகிறார்.
 
படம் தொடங்கி முப்பது நாற்பது நிமிடங்களில் இந்த காட்சிகள் அனைத்தும் வந்து விடுகின்றன. ஒரு பரபரப்பான த்ரில்லருக்குரிய வேகத்தில் பயணிக்கும் படம் அதன் பிறகு அப்படியே ஓரிடத்தில் நின்று விடுகிறது. கிடி ஆசிரியரை சித்திரவதை செய்வதுதான் பிற்பகுதி முழுக்க. 
 

எவ்வளவு அடித்தும் தான் குற்றவாளி இல்லை என்பதில் ஆசிரியர் உறுதியாக இருக்கிறார். ஒரு சைக்கோ அடி உதைக்கு பயப்படுவதில்லை. சைக்கோ பயப்படுவது இன்னொரு சைக்கோவைப் பார்த்துதான் என்று சித்திரவதையை கடுமையாக்குகிறார் கிடி. ஒருவேளை உண்மையாகவே அவர் குற்றவாளியாக இல்லாமலிருந்தால் என்ற மிக்கியின் கேள்வியை கிடி பொருட்படுத்துவதில்லை. 
படத்தின் பெரும்பகுதி சித்திரவதை என்ற புள்ளியில் மையம் கொண்டிருந்தாலும் திரைக்கதை அந்தப் பகுதிகளையும் சுவாரஸியமாக நகர்த்துகிறது. ஆசிரியரின் மீது பரிதாபம் ஏற்படும் வகையிலேயே காட்சிகள் நகருகின்றன. இறுதியில் அவர் ஒப்புக் கொள்ளாமலே கொலைகளுக்கு காரணம் அவர்தான் என்பது தெரிய வருகிறது. 
 
சீரியல் கில்லர் படங்களின் சுவாரஸியமான பகுதியே கிடைக்கிற தடயங்களின் வழியாக எப்படி கில்லரை நெருங்குகிறார்கள் என்பதுதான். ஆனால் அந்தப் பகுதி இதில் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் ஆசிரியர் சந்தேக வட்டத்திற்குள் வந்தார் என்பதைக்கூட படத்தில் சொல்ல முயற்சிக்கவில்லை. 
 
ஏன்? இது முக்கியமான கேள்வி. 
 
 

இதற்கு அரசியல்ரீதியாக ஒரு பதிலை முன் வைக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களிடம் மிகக்கடுமையாகவும், கொடூரமாகவும் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரண விளக்கம்தான் இந்தப் படம். பாலஸ்தீனர்கள் வெளியில் படத்தில் வரும் ஆசிரியரைப் போல அப்பாவியாக தெரிந்தாலும் அவர்கள் அடிப்படையில் ஒரு சைக்கோவின் கூறுகளை கொண்டவர்கள். ஒரு சைக்கோவை சைக்கோவைப் போன்றே கையாள வேண்டும். படத்தைப் பார்க்கிறவர்களுக்கு கிடியின் செயல் எப்படி கொடூரமாக தோன்றுகிறதோ அப்படி இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடம் நடந்து கொள்வதும் வெளியுலகுக்கு கொடூரமாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த ஆசிரியரைப் போல் பாலஸ்தீனர்கள்தான் அனைத்துத் தவறுகளுக்கும், கொடூரங்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்கள். அவர்களிடம் கடுமையாகவும், கொடூரமாகவுமே நடந்து கொள்ள வேண்டும். படத்தில் கிடியும் அவரது தந்தையும் இஸ்ரேல் ராணுவ வீரர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் எதேச்சையானதல்ல.
இந்தப் படத்தை சிறந்த த்ரில்லர் என்று பலரும் பாராட்டியுள்ளனர். அது உண்மையும்கூட. இசையும், கேமராவும் சாதாரணக் காட்சியையே அசாதாரணமாக்குகின்றன. உதாரணமாக சிறுவர்கள் கண்ணாமூச்சியாடும் முதல் காட்சியையும், ஒதுக்குப்புறமாக வீடு வாங்கும் கிடி நிலவறையில் ஒருவர் அலறினால் வெளியே சத்தம் கேட்குமா என்று பரிசோதிக்கும் காட்சியையும் சொல்லலாம்.
 
நாம் மேலே பார்த்த அரசியல்ரீதியான விமர்சனத்துடன் படத்தைப் பார்ப்பது ஆபத்தானது. பாலஸ்தீனர்களின் மீதான இஸ்ரேலியர்களின் தாக்குதலையும், அடக்குமுறை நடவடிக்கையையும் ஒத்துக் கொள்வது போலாகிவிடும்.