வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : புதன், 25 பிப்ரவரி 2015 (11:45 IST)

மூன்று ஆஸ்கர் விருதுகள் வென்ற விப்லாஷ்

Damien Chazelle  இயக்கிய விப்லாஷ் திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்றை வென்றது. சிறந்த துணை நடிகர், சிறந்த ஃபிலிம் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்சிங். 
 
விப்லாஷ் கலையையும், கலைஞனையும் பற்றியது. கலை மனிதர்களின் மனதை சாந்தப்படுத்தும், மனிதர்களிடையே வெறுப்பை குறைக்கும், சமாதானத்தை கொண்டு வரும் என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறேnம். அது உண்மையாகவும் பலநேரம் இருந்திருக்கிது. அந்த கலையை உருவாக்கும் கலைஞன் அதேவிதமான சாந்தத்தையும், அமைதியையும் அனுபவப்படுகிறானா என்பது கேள்விக்குரியது. அன்பையும், சமாதானத்தையும் கொண்டு வருவதாக கருதப்படும் கலை மிகுந்த மனப்போராட்டத்தின் ஊடாகத்தான் உருவாகிறது. கலைஞன் தனது நேரத்தை உழைப்பை காதலியை தன்மானத்தை சுருக்கமான தனது வாழ்க்கையையே அதற்கு தரவேண்டியிருக்கிறது.
விப்லாஷ் படத்தில் வரும் முதல்வருட ஜாஸ் மாணவன் ஆண்ட்ரூ நீமேனுக்கு ட்ரம்மராக வேண்டும் என்று ஆசை. உலகின் சிறந்த ஜாஸ் ட்ரம்மரான Buddy Richதான் அவனது கனவு நாயகன். அதற்காக நியூயார்க்கிலுள்ள பிரபல பள்ளியில் இணைந்து ட்ரம்ஸ் கற்று வருகிறான். 
 
ஸ்டுடியோ பேண்ட் என்ற இசைக்குழுவை நடத்தும் கன்டெக்டர் டெரன்ஸ் ப்ளெட்சர் ஆண்ட்ரூவை தனது குழுவில் ட்ரம்மராக சேர்த்துக் கொள்கிறார். ஏற்கனவே இருக்கும் ட்ரம்மருக்கு சப்டிட்யூட்டாக ஆண்ட்ரூ அந்த பேண்டில் இணைந்து கொள்கிறான்.
 
டெரன்ஸ் ப்ளெட்சர் இசைக்கலைஞர்களை நடத்தும் விதம் மோசமானது. தன்மானத்தை காவுகேட்கும் அளவுக்கு கலைஞர்களை காயப்படுத்தும் வழிமுறைகளில் டெரன்ஸ் தேர்ந்தவர். அவரது கோபத்துக்கு ஆண்ட்ரூ அடிக்கடி ஆளாகிறான். அவன் எவ்வளவுதான் ரத்தம்வடிய பயிற்சி செய்தாலும் கடைசியில் டெரன்ஸின் ரௌத்திரத்தின் காலடியில் தனது தன்மானத்தை இழக்க வேண்டி வருகிறது. 
 
காட்சிகள் நகரும்போது டெரன்ஸின் நடத்தைக்கு ஒரு கற்பிதம் நமக்கு கிடைக்கிறது. இசைக்கலைஞனா இல்லை அவனை பயிற்றுவிக்கும் வழிநடத்தும் கன்டெக்டரா யார் பெரியவர் என்ற போட்டிக்குள் டெரன்ஸ் அல்லாடுவதைப் பார்க்கிறேnம்.
 
ஒருமுறை டெரன்ஸை பாய்ந்து அடித்துவிடுகிறான் ஆண்ட்ரூ. அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறான். அதுவரை ஓயாமல் இசைத்துக் கொண்டிருந்த அவனது ட்ரம்ஸ் மௌனத்துக்கு திரும்புகிறது. அது இனி ஒருபோதும் ஒலிக்கப் போவதில்லை என கருதும் போது டெரன்ஸை ஒரு பாரில் சந்திக்கிறான். 
 
இசையில் அற்புதங்களை நிகழ்த்தவே தான் தனது மாணவர்களை அவர்களின் திறமைக்குமேல் உந்தித் தள்ளுவதாக டெரன்ஸ் கூறுகிறார். தற்போது அவரும் அந்தப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். டெரன்ஸின் நடத்தை காரணமாக மனஅழுத்தத்துக்குள்ளான ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதன் காரணமாக டெரன்ஸ் தனது வேலையை இழக்க நேர்கிறது.

பாரில் பாந்தமாக பேசும் டெரன்ஸ், பெஸ்டிவல் கான்சர்ட்டில் தனது பேண்டுக்காக வாசிக்கும்படி அழைப்பு விடுக்கிறார். ஆண்ட்ரூ அதனை ஏற்றுக் கொள்கிறான்.
 
பார்வையாளர்கள் முன்பு இசைக்கிற நாள் வருகிறது. ஆண்ட்ரூவுக்கு மட்டும் அவர்கள் இசைக்க வேண்டிய இசைக்குறிப்புக்குப் பதில் வேறொன்று தரப்படுகிறது. மற்ற கலைஞர்கள் ஒரேவிதமாக வாசிக்க ஆண்ட்ரூவின் ட்ரம்ஸ் இசை அவற்றில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. டெரன்ஸ் தன்னை பழிவாங்கிவிட்டதை உணர்ந்தவன் கழிவிரக்கத்துடன் மேடையைவிட்டு வெளியேறுகிறான். 
டெரன்ஸ் நிகழ்ச்சி முடிந்ததற்கு அறிகுறியாக பார்வையாளர்களிடம் உரையாடத் தொடங்கும் நேரம் திரும்பிவரும் ஆண்ட்ரூ கேரவன் என்ற இசைக்கோவையை ட்ரம்ஸில் வாசிக்க ஆரம்பிக்கிறான். டெரன்ஸ் தடுக்க முயல்வதை அவன் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இசைக்க மற்ற கலைஞர்கள் ஆண்ட்ரூவுடன் இணைந்து கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் டெரன்ஸுக்குள் இருக்கும் கன்டெக்டர் வெளிப்படுகிறான்.

ஆண்ட்ரூவின் ஆவேசத்தில் அவர் தன்னையும் கரைத்துக்கொள்கிறார். இசை அவரது ஈகோவை இல்லாமல் செய்கிறது. ஆண்ட்ரூவின் கலைக்கு, அவன் ட்ரம்ஸின் மீது கொண்டிருந்த காதலுக்கு, அர்ப்பணிப்புக்கு கடைசியில் டெரன்ஸிடமிருந்தே அங்கீகாரம் கிடைக்கிறது. அவரது ஈகோவை ஆண்ட்ரூவின் இசை இல்லாமல் செய்கிறது. அதைவிட என்ன சாதனையை ஒருவனின் இசை செய்துவிட முடியும்?
 
அந்த காரணத்தால் பார்வையாளர்களிடமிருந்து கிளம்பும் கரவொலிக்கு முன்பே இயக்குனர் படத்தை முடித்துக் கொள்கிறார்.
 
ஆண்ட்ரூவாக நடித்திருக்கும் Miles Teller, டெரன்ஸாக நடித்துள்ள ஜே.கே.சிம்மன்ஸ் இருவரும் தங்களின் பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். சிம்மன்ஸின் மொட்டைத் தலையும், கச்சிதமான உடற்கட்டும், ஆவேசம் மிளிரும் கண்களும் ஆஸ்கர் கிடைத்ததற்கான நியாயத்தை செய்துள்ளன. 
 
கலைஞனையும், பயிற்சியாளனையும் முன்வைத்து 2010 -இல் பிளாக் ஸ்வான் என்ற திரைப்படம் வெளிவந்தது. கலைஞன் என்பவன் யார், எப்படி அவன் கலையுடன் ஒன்றிப் போகிறான் என்பதை அற்புதமாகச் சொல்லும் படம். அதில் நடாலி போர்ட்மேன் நடனக் கலைஞராக நடித்திருந்தார். ஆஸ்கரில் ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட அப்படம் சிறந்த நடிகைக்கான ஒரேயொரு விருதை மட்டுமே வென்றது. அதனுடன் ஒப்பிடுகையில் விப்லாஷ் அதிர்ஷ்டக்கார படம்.