ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. உலக ‌சி‌னிமா
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 3 ஜூன் 2014 (17:41 IST)

The Past - உலக சினிமா

2012-ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற ஏ செபரேஷன் படத்தை இயக்கிய அஸ்கர் ஃபர்ஹடி-யின் இயக்கத்தில் 2013 வெளியான படம் த பாஸ்ட். ஏ செபரேஷன் படத்தைப் போலவே இந்தப் படமும் குடும்பம், உறவு சிக்கல்கள் என்று பயணிக்கிறது. 
உறவுகளால் பின்னப்பட்ட சிறைதான் குடும்பம். உறவுகளில் ஏற்படும் அபஸ்வரங்கள் மனிதனை ஒரு எரிமலையாக மாற்றி விடுகிறது. எப்போது வெடிக்கும், எந்த மாதிரியான பாதிப்பை உண்டாக்கும் என்று கணிக்க முடியாத எரிமலை என்றால் அது மனிதனின் மனம்தான். அப்படியான எரிமலைகளின் மத்தியில் உலவும் அனுபவத்தை தருகிறது த பாஸ்ட்.
 
இரானியரான அஹமத் பாரிஸுக்கு வருகிறார். விமான நிலையத்தில் மேரி  என்ற நடுத்தர வயது பெண் அவரை அழைத்துச் செல்கிறாள். பிறகுதான் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்வதும் தெரிகிறது. அஹமதின் இந்தப் பயணம் மேரி விரும்பும் விவாகரத்தை அவளுக்கு பெற்றுத் தருவதற்குதான்.
 

மேரியின் வீட்டில் அஹமத் தங்குகிறார். மேரியின் முந்தைய கணவர்களின் மூலம் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்தவள் லூசிக்கு டீன்ஏஜ் பருவம். மேரியின் வீட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அவன் சமீர் என்பவ‌ரின் மகன். மேரி தற்போது சமீருடன்தான் வாழ்ந்து வருகிறாள். சமீரின் மனைவி கோமாவில் மருத்துவமனையில் இருப்பதால் சமீரின் மகனை மேரி பார்த்துக் கொள்கிறாள். சமீருடனான மேரியின் உறவு லூசிக்கு பிடிக்கவில்லை. அவள் மேரி-சமீர் உறவை கடுமையாக வெறுக்கிறாள். அவளை சமாதானப்படுத்தும் பொறுப்பை அஹமத் ஏற்றுக் கொள்கிறார்.
மனைவியின் வருங்கால கணவனுடனும், அவனது மகனுடனும் ஒரே வீட்டை பகிர்ந்து கொள்வது அஹமதுக்கு பிடிக்கவில்லை. சமீரின் மகன் எப்போதும் அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருக்கிறான். வீட்டில் எப்போதும் ஒரு தர்மச் சங்கடமான நிலை நிலவுகிறது. 
 
குடும்ப உறவின் அபத்தமும், ஆனந்தமும் அடுத்தவர்களை நாம் ஒரு பொருட்டாக மதிப்பதிலிருந்து தொடங்குகிறது. அந்த மதிப்பை உருவாக்கும் காரணியாக விளங்குவது நம்முடைய குற்றவுணர்வு. பாஸிடிவ் கில்ட் எனப்படும் இந்த குற்றவுணர்வுதான் உறவுக்குள்ளும், அதற்கு வெளியேயும் அன்பையும், கருணையையும் நிலை நிறுத்துகிறது. தனி மனிதர்களின் நீதி நியாயம்கூட இந்த பாஸிடிவ் கில்டின் ஒரு பகுதிதான். 
 

ஏ செபரேஷனில் வேலைக்கார பெண்மணியின் இந்த பாஸிடிவ் கில்ட்தான் ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிறது. த பாஸ்டிலும் அப்படியே. மேரி - சமீர் உறவுதான் சமீரின் மனைவி தற்கொலைக்கு முயன்று கோமாவில் விழுவதற்கு காரணம் என்று லூசி நம்புகிறாள். அவள் அப்படி நம்புவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அந்த காரணம் அவளுக்குள் ஏற்படுத்தும் குற்றவுணர்வே அவளை நிம்மதியில்லாதவளாக ஆக்குகிறது. அதனை அஹமதிடம் அவள் வெளிப்படுத்திய பிறகு படம் ஒரு த்ரில்லரைப் போல் நகர்கிறது.
மனித உணர்வுகளை கச்சிதமாக திரையில் வெளிப்படுத்துவதில் அஸ்கர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளில் இம்மியளவு மிகையில்லை. இந்தளவுக்கு உணர்ச்சிகளை கையாளும் சமகால இயக்குனர்கள் குறைவு. த செபரேஷன், த பாஸ்ட் இரண்டு படங்களையும் பார்க்கையில் பாஸிடிவ் கில்ட் இரு படங்களிலும் மிகப்பெரிய ரோலை எடுத்துக் கொண்டிருப்பதை காணலாம். 
 
இந்தியாவின் கார்ப்பரேட் சாமியார்கள் இந்த பாஸிடிவ் கில்டைதான் மனிதர்களிடமிருந்து அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் ஆசைப்படு, இது அவன் விதி என்ற வார்த்தைகளில் ஸ்ட்ரெஸ்ஸை ரிலீஸ் செய்கிறேன் என்று சக மனிதர்களை பொருட்படுத்தும் மனிதனின் மனசாட்சியை, அவனின் பாஸிடிவ் கில்டை அகற்றுகிறார்கள்.
 
குடும்ப உறவுகள் பற்றிய கதை பதற்றமான த்ரில்லரின் விறுவிறுப்புடன் ஒரு முழுமையான அனுபவத்தை தர அஸ்கரின் திரைக்கதை பெரிதும் உதவியிருக்கிறது.