1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2016 (12:20 IST)

புனித வெள்ளி ஸ்பெஷல் - Risen

புனித வெள்ளி ஸ்பெஷல் - Risen

பைபிள் கதைகள் மற்றும் அதன் நம்பிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களே உலகில் மிக அதிகம். வருடந்தோறும் பைபிளை மையப்படுத்திய கதைகள் வெளியாகின்றன.


 


இதில் பெருவாரியானவை ஏற்கனவே திரைப்படங்களாக எடுக்கப்பட்டவை. தத்துவம் சார்ந்தும், விமர்சனம் சார்ந்தும், பார்வை சார்ந்தும் ஒரே கதை வேறு புரிதல்களுடன் முன்வைக்கப்படுகின்றன. 
 
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ரிசன் திரைப்படமும் அத்தகைய ஒன்று. ஏசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்ததுவரையான மூன்று நாள் வாழ்க்கையை ரிசன் சொல்கிறது. ஏசுவின் இந்த மூன்று நாளை குறித்து உலகில் 
இதுவரை நான்கு டஜன் படங்களாவது வந்திருக்கும். அதிலிருந்து ரிசன் எப்படி மாறுபடுகிறது என்பதே அதன் முக்கியத்துவம். 
 
ஏசுவின் பார்வையில் அல்லது அவரது சீடர்களின் பார்வையில் மட்டுமே ஏசுவின் கடைசி தினங்களும், அவர் உயிர்த்தெழுந்த வரலாறும் இதுவரை காட்டப்பட்டுள்ளது. ரிசனில், ஏசுவை வேட்டையாடும் ரோமானிய தளபதியின் பார்வையில் படம் சொல்லப்படுகிறது. 
 
ஏசு இறந்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்று யூதர்கள் நம்புகிறார்கள். அதனால் அவர்கள் அவரது உடலை கல்லறையிலிருந்து திருடிப் போகலாம் என்று கல்லறைக்கு காவல் போடுகிறார்கள். அப்படியும் அவரது உடல் காணாமல் போகிறது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவுகிறது. ஏசு உயிர்த்தெழவில்லை என்பதை நிரூபிக்க ரோமானிய தளபதி ஒருவர் ஏசுவின் சீடர்களை பின்தொடர்கிறார். அவரது விசாரணை எதில் முடிந்தது என்பதை ரிசன் சொல்கிறது. 
 
ஏசுவின் மீது நம்பிக்கை உள்ள ஒருவரது பார்வையில் ஏசுவை குறித்து சொல்வதைவிட, நம்பிக்கையில்லாத ஒருவரது பார்வையில் அவரது உயிர்த்தெழுதலை சொல்வதே இந்தப் படத்தின் சிறப்பு எனலாம். மிகக்கறைந்த பட்ஜெட்டில் - சுமார் 20 மில்லியன் டாலர்கள் - படத்தை கெவின் ரெனால்ட்ஸ் இயக்கியுள்ளார். இவர் ராபின்ஹுட் - பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ், வாட்டர் வேர்ல்ட் போன்ற படங்களை இயக்கியவர். 1995 -இல் வாட்டர் வேர்ல்ட் வெளியான போது, அதுதான் உலகில் அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. அப்பேற்பட்டவர் ஏசுவின் சரித்திரத்தை வெறும் 20 மில்லியன் டாலர்களில் எடுத்தது ஆச்சரியமே. 
 
படம் வெளியான முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் 11.80 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதிகபட்சமாக யுஎஸ்ஸில் 34.4 மில்லியன் டாலர்களே இதனால் வசூலிக்க முடிந்தது. யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் வெறும் ஒரு மில்லியன் டாலர்கள். 
 
பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், நோவா போன்ற பிரமாண்ட பேபிள் படங்களைப் போன்று ரிசனால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. என்றாலும், அதன் வித்தியாசமான பார்வைக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.